search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விமான சாகச நிகழ்ச்சி: ஒருபக்கம் சாதனை, மறுப்பக்கம் வேதனை..!

    • சிற்றுந்து சேவையை பயன்படுத்த முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
    • சிலர் மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்றது. சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் மெரினாவில் கூடிய மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    நீண்ட காலத்திற்கு சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி என்பதால், பல லட்சம் பேர் மெரினாவில் திரண்டனர். விமான சாகச நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், இறுதியில் அரங்கேறிய கூட்ட நெரிசல், உயிரிழப்பு பொது மக்களை கொதிப்படைய செய்ததோடு, பல கேள்விகளை கேட்க செய்துள்ளது.



    மாநில தலைநகரில் கேளிக்கை நிகழ்வொன்று ஐந்து பேரின் உயிரை காவு வாங்கிய சம்பவத்தில் எங்கு தவறு நடந்தது? யார் யார் என்னென்ன கூறினார்கள்? கலந்து கொண்டவர்கள் கூறியது என்ன? குளறுபடிகளுக்கு காரணம் என்ன?

    விமான சாகச நிகழ்ச்சியில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்ளலாம், அதற்குரிய ஏற்பாடுகளை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கிறோம் என்று விமானப்படை துணை தளபதி தெரிவித்து இருந்தார்.

    சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. எனினும், சிற்றுந்து சேவையை பயன்படுத்த முடியவில்லை என்று அங்கு வந்தவர்களில் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    சாகச நிகழ்ச்சியை காண வருவோருக்கு மெட்ரோ ரெயில்வே சார்பில் முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் ஞாயிற்றுக் கிழமை அட்டவணையில் இயக்கப்பட்டன. இதனால் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


    மெட்ரோ போன்றே புறநகர் ரெயில் சேவையும் ஞாயிற்றுக் கிழமை அட்டவணையில் இயக்கப்பட்டன. அதிக கால இடைவெளியியில் புறநகர் ரெயில்கள் இயக்கப்பட்டதால், ரெயில் நிலையங்களில் மக்கள் நிற்கக்கூட இடமில்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் ரெயில்களில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் சிலர் தண்டவாளங்களில் ஆபத்தை உணராமல் நடந்து சென்றனர்.

    மக்கள் கூட்டம் அதிகரித்து வந்த போதிலும், அவர்களை கட்டுப்படுத்த போதுமான தடுப்புகள், காவலர்கள் இல்லாதது, நிகழ்ச்சி முடிந்த பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது என நிகழ்ச்சியை காண வந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதோடு நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கு அதிக இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்றும் நிகழ்ச்சி முடிந்து வெளியேறுவதற்கு போதுமான வழிகள் ஏற்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    மக்கள் கடற்கரையை விட்டு வெளியேற அதிகளவில் வெளியேறும் வழித்தடங்கள் அமைக்கப்படாதது, பொதுப் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்று நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்கள் தெரிவித்தனர்.

    சாகச நிகழ்ச்சிக்காக பல்வேறு அரசு துறைகள் இணைந்து செயல்பட்டன. அதீத வெப்பம் காரணமாக ஏற்பட்ட உடல் உபாதைகளால் தான் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், உயிரிழப்பு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

    சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறும் போது, "விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்காக குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பல இடங்களில் டேன்க் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது என்றார்.

    பல லட்சம் பேர் கூடுவார்கள் என்ற இடத்தில் அத்தியாவசிய வசதிகளுக்கு போதிய முன்னேற்பாடுகளை செய்ய தவறியது, நிகழ்ச்சியை காண வந்தவர்களை ஒழுங்குப்படுத்த தவறியது, நிகழ்ச்சிக்கு பிறகு பொது மக்கள் நடந்து வெளியே செல்லும் பாதையிலேயே வாகனங்களை அனுமித்தது, அதே பாதையில் அரசு அதிகாரிகள் வாகனங்கள் கடந்து செல்ல முற்பட்டது என சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு, மக்கள் அங்கிருந்து பத்திரமாக வீடு திரும்புவதே சாகசமாகி போனது!!

    Next Story
    ×