search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    "கலைஞர் மு.கருணாநிதி வரலாறு" "திராவிடமும் சமூக மாற்றமும்": நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • நூல்களின் முதல் பிரதியை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்
    • சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக, பாடுபடுவது தான் திராவிட மாடல் என முதல்வர் பேச்சு

    சென்னை:

    மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதிய "கலைஞர் மு.கருணாநிதி வரலாறு" மற்றும் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய "திராவிடமும் சமூக மாற்றமும்" ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

    "கலைஞர் மு. கருணாநிதி வரலாறு" தமிழ்ப் பதிப்பு நூலின் முதல் பிரதியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். "திராவிடமும் சமூக மாற்றமும்" தமிழ்ப் பதிப்பு நூலின் முதல் பிரதியை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மூத்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களும் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களும் அறிவியக்கமாம் திராவிட இயக்கத்திற்குக் காலம் அளித்த கொடை. ஊடகங்களில் கட்டுரைகளாக - பேச்சுகளாக இவர்கள் திராவிட இயக்கத்தின் மீதான அவதூறுகளை உண்மைகளால் எதிர்கொண்டு, நேர்மையான விமர்சனங்களை முன்வைத்து நம் சிந்தனைகளுக்குப் புதிய பரிமாணத்தை ஊட்டியவர்கள். இவர்களது எழுத்துகள் புதிய பரிணாமத்தை அடைந்து புத்தகங்களாக உங்கள் கைகளுக்கு வந்திருக்கிறது. அவற்றைப் படித்து பலரும் பயனுற வேண்டும்; இன்னும் பல சிந்தனையாளர்கள் முளைக்க விதைகளாக இந்நூல்கள் விளங்க வேண்டும்.

    சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக, பாடுபடுவது தான் திராவிட மாடல். மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ கூடியது அல்ல. சுய மரியாதை, சமதர்ம அரசியலை எந்நாளும் உயர்த்திப் பிடிப்போம். இத்தகைய சிந்தனைகளை விதைக்கவும் உரவாக்கவும் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ஜெயரஞ்சன் போன்று ஏராளமான சிந்தனையாளர்கள் தேவை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×