என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கருணாநிதி கையெழுத்திடவில்லை- மு.க.ஸ்டாலின் விளக்கம்
- கச்சத்தீவு நமக்கு சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்தார்.
- கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமையை காப்போம்.
ராமநாதபுரம்:
மண்டபத்தில் இன்று நடந்த மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும்போதெல்லாம் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வலியுறுத்தி வருகிறேன்.
ஏன் கடந்த வாரம் இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது கூட கடந்த 19-ந்தேதி பிரதமருக்கு இதுதொடர்பாக நான் கடிதம் எழுதி இருந்தேன். ஆனால் இங்கு இருக்கக்கூடிய சிலர், இதற்கு தி.மு.க. தான் காரணம் என கூறி வருகிறார்கள்.
ஆனால் கச்சத்தீவை பொருத்தவரை முழு உரிமை தமிழ்நாட்டிற்கு தான் உண்டு என்பதற்கான ஆதாரங்களை 1973-ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். அதையும் மீறி தான் 1974-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி கச்சத்தீவு ஒப்பந்தம் இந்தியா-இலங்கை பிரதமர்களால் செய்து கொள்ளப்பட்டது.
இது ஒப்பந்தம் தானே தவிர, சட்டம் அல்ல. அப்படி எந்த சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அதை தி.மு.க.வும் ஆதரிக்கவில்லை. ஒப்பந்தம் செய்தவுடன் உடனடியாக டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சந்தித்தார்.
கச்சத்தீவு நமக்கு சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்தார். அன்றைக்கு சட்ட அமைச்சராக இருந்த மாதவனும், கருணாநிதியுடன் சென்றார். சென்னையில் இதே ஆதாரங்களை வைத்து மறுபடியும் ஆதாரங்களை வெளியிட்டார். அதன்படி கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்த காலத்திலும் இருந்ததில்லை. போர்ச்சுகீசியர் மன்னர் காலத்து வரைபடங்கள் கூட அப்படித்தான் சொல்கின்றன.
1954-ம் ஆண்டு இலங்கை அரசு வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை. கரையோரத்தில் சங்கு எடுக்கக்கூடிய உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு தான் இருந்தது என்பதை காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக அவர் எந்த காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கூட கட்டியது கிடையாது.
கச்சத்தீவு இந்தியாவுக்கு தான் சொந்தமானது என்பதற்கான முழு ஆதாரத்தையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் பாராளுமன்றத்திலேயே வழங்கினார். அதாவது 29.6.1974 அன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கூட்டினார். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரித்த அந்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான். அன்று முதல் இன்று வரை கச்சத்தீவு விவகாரத்தில் அ.தி.மு.க. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தவர் கருணாநிதி. தி.மு.க. சார்பில் 1974-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி தொடங்கி 45 முக்கிய நகரங்களில் இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன.
தஞ்சாவூரில் கருணாநிதி, சென்னையில் அன்பழகன் பேசினார்கள். ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தில் நான் பேசினேன். இந்த வரலாறு தெரியாமல் குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாமல் சிலர் பேசி திரிவது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது. கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கருணாநிதி கையெழுத்திடவில்லை.
தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை மறுக்கப்படுவதால் இந்திய அரசு இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்க வேண்டும்.
பா.ஜனதா அரசு இதற்கான முயற்சியில் இறங்கவில்லை என்றால் அடுத்து நடைபெறக்கூடிய பாராமன்ற தேர்தலுக்குப் பிறகு அமைய கூடிய புதிய அரசு இதனை நிறைவேற்ற கூடிய வகையில் நமது நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமையை காப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்