search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கலைஞர் நூற்றாண்டு பூங்கா- முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்
    X

    கலைஞர் நூற்றாண்டு பூங்கா- முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

    • பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம், சுவரோவியம் ஆகியவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
    • இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டை பெறலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவை போற்றுவதற்காக சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவுக்கு எதிரில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் 6.09 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என கடந்த 15.8.2023 அன்று சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறையின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பூங்கா அமைக்கும் பணி 27.2.2024 அன்று தொடங்கி நிறைவு பெற்றுள்ளது.

    ரூ.45 கோடியே 99 லட்சம் செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டுக்காக இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார்.

    நுழைவுவாயிலில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் எனப்படும் கம்பியில் தொங்கியபடி செல்லும் சாகச பயணம், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர்கொடி வளைவுப்பாதை, 120 அடி பனி மூட்டப்பாதை, 2,600 சதுர அடி நீளமுள்ள ஆர்க்கிட் குடில், அரியவகை கண்கவர் பூச்செடிகளை காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரத்துடன் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை,

    சென்னை கதீட்ரல் சாலையில் இன்று திறக்கப்பட வுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் உள்ள 'ஆர்கிட்' குடில்.

    அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம், சுவரோவியம் ஆகியவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என்றும், இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டை பெறலாம். 'கியூ ஆர்' கோடு மூலமாகவும் நுழைவுச்சீட்டை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×