search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    யானைகவுனி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
    X

    யானைகவுனி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    • சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
    • மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    சென்னை:

    சென்னையில் நேற்றிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று காலையிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் நகரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மழை நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை நேரில் சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி அவர்கள் நகரில் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கொட்டித் தீர்க்கும் கன மழையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் களத்தில் இறங்கி மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

    வடசென்னை பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள யானைக்கவுனி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

    யானைக்கவுனி மேம்பாலம் செல்லக்கூடிய பகுதியில் அங்குள்ள கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.

    ஏற்கனவே அந்த கால்வாய் தூர்வாரப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிக மழை பெய்வதால் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தது. அவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அது மட்டுமின்றி அங்குள்ள பகுதிகளையும் நடந்து சென்று பார்வையிட்டார்.

    அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் அங்கு நடைபெறும் பணிகளை விவரித்து கூறினர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசின்பிரிட்ஜ் மேம்பாலம் பகுதிக்கு சென்று பார்த்தார். தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை விரைந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன் பிறகு புளியந்தோப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள கால்வாயை பார்வையிட்டார். அங்கு பணியாற்றி வந்த மாநகராட்சி ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். அங்கிருந்த தூய்மை பணியாளர்களிடமும் சகஜமாக பேசினார்.

    அப்போது அங்குள்ள ஒரு டீக்கடைக்கு அவர்களை அழைத்து சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூய்மை பணியாளர்களுக்கு பிஸ்கட், டீ வாங்கி கொடுத்தார். அந்த கடையில் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் டீ குடித்தார்.

    இதைத் தொடர்ந்து கொளத்தூர் திரு.வி.க.நகர், வில்லிவாக்கம் தொகுதிகளுக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

    Next Story
    ×