search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • பிரதமருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.
    • பல்வேறு பொதுப் பிரச்சனைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.

    சென்னை:

    பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்று இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

    அப்போது பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்முகத்துடன் வரவேற்றார். பிரத மருக்கு சால்வை அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.

    அப்போது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் "தடம் பெட்டகத்தை" பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசளித்தார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார்.

    தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினார். அப்போது பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான ஒன்றிய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்ட ஒரு கூட்டு முயற்சி நிறுவனமாகும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செயலாளர் இதன் தலைவர் ஆவார். 54.1 கி.மீ மொத்த நீளத்துடன் இரண்டு வழித்தடங்களுடன் கூடிய சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் I-ஐ ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன் செயல்படுத்தியுள்ளது.

    பொதுப் போக்குவரத் தினை உயர்த்திட வேண்டிய தேவையைக் கண்டறிந்து, தமிழ்நாடு அரசு சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II ற்கு ஒப்புதல் அளித்து, 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன் ஒப்புதல் வழங்கவும், இருத ரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெறுவதற்கும், ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்திருந்தது. ஒன்றிய அரசின் பங்களிப்பு வரப்பெறாத காரணத்தி னால் பணிகளில் கடந்த ஆண்டு முதல் ஏற்பட்ட வேகக் குறைவு, நடப்பு நிதி யாண்டிலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் இந்த ஆண்டின் மொத்த திட்டச் செலவினம் ரூ.8000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, பல்வேறு நிலைகளில் பணி நிறை வடையும் தேதிகள் ஒரு ஆண்டளவிற்கு தாமத மாகி, இறுதியாக கட்டி முடிக்கும் தேதியை டிசம்பர் 2027-லிருந்து டிசம்பர் 2028 ஆக தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இது, மிகுதியான காலம் மற்றும் செலவின அதிகரிப்பை ஏற்படுத்தி விடும்,

    இந்தியாவிலுள்ள பெரும்பாலான மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு சமவீத மூலதனப் பங்களிப்பு அடிப்படையில் நிதி வழங்கியுள்ளதை இங்கு குறிப்பிடுவது முக்கியமாகக் கருதப்படுகிறது.

    ஆகையால் இந்தப் பொருள் குறித்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II ற்கு ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன், கட்டம்-I ற்கு வழங்கப்பட்டது போன்றும், பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளவாறும் விரைவில் ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் சமக்ரசிக்க்ஷா திட்டமானது 2018-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது பள்ளி முன்பருவக்கல்வி முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இத்திட்டம் பள்ளிக்கல்வித்துறையில் விரிவான முன்னெடுப்புகளை மேற்கொள்ளத்தக்க வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடானது, ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் திட்ட ஏற்பளிப்புக்குழுவால் ஏற்பளிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்பளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடானது ஒன்றிய மற்றும் மாநில அரசால் 60:40 என்ற விகிதத்திலான பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சமக்ரசிக்க்ஷா திட்டம் மூலம் தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் 43,94,906 மாணவர்கள், 2,21,817 ஆசிரியர்கள் மற்றும் 32,701 அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படவில்லையெனில் ஒன்றிய அரசானது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வரும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு வழங்கிடும் முக்கியத்துவத்தை குறைப்பதாகவே அமைந்திடும்.

    எனவே, தமிழ்நாட்டின் நியாயமான இக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து தேசிய கல்விக் கொள்கை 2020-ல் வரையறுக்கப்பட்டுள்ள மும்மொழிக் கோட்பாட்டினை வலியுறுத்துவதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் மும்மொழிக் கோட்பாடு சார்ந்து ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்பு ரீதியான பாதுகாப்பினை கருத்திற்கொண்டு, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உட்பிரிவில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்படின், தமிழ்நாடு மாநிலமும் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள ஏதுவாக அமையும்.

    எனவே, தமிழ்நாட்டில் கல்வி பயிலும் 43,94,906 மாணவர்களின் எதிர்கால நலன்கருதி அவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது சார்ந்த இறுதி முடிவுகள் எட்டப்படும் வரை காத்திராமல், ஏற்கனவே சமக்ரசிக்க்ஷா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் திட்ட பணிகளுக்கான நிதியினை உடன் விடுவித்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழ்நாடு 1076 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரையையும், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிப்பை தொழிலாக கொண்டுள்ள மிகப்பெரும் கடலோர சமுதாயத்தையும் கொண்டு உள்ளது. சமீபகாலமாக அடுத்தடுத்து இந்திய மீனவர்கள் மீன்பிடி கலன்களுடன் இலங்கை அரசால் கைது செய்யப்படுகின்றனர். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தப் பிரச்சனையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    2018-ஆம் ஆண்டுக்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட 191 மீன்பிடி படகுகளின் தற்போதைய நிலை இதுவரை அறியப்படாமல் உள்ளதால் அலுவலர்கள் மற்றும் மீனவர்கள் அடங்கிய குழு படகுகளை ஆய்வு செய்ய அனுமதியினை பெற்றுத் தருமாறும் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அண்மைகாலத்தில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை நாட்டுடமையாக்கப்படும் கொள்கையால், லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஏழை மீனவர்கள் மீது இலங்கை நீதிமன்றங்கள் மிக மிக அதிகப்படியான அபராதத் தொகையினை விதித்து அரசாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இந்திய இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளதாக அறியப்படுகிறது. எனவே, 2016-ம் ஆண்டுக்கு பிறகு இரு நாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில், இக்கூட்டத்தினையும் உடனடியாக கூட்டிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த முக்கிய பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள 145 மீனவர்களையும், அவர்க ளது படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் நட வடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மேற்படி கோரிக்கைகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

    இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிரதமர் அலுவலக செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதன் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மறைந்த மூத்த மார்க்்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத் தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை 5.35 மணியளவில் விமானத்தில் புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு சென்னை திரும்புகிறார். அதன் பிறகு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்று தங்குகிறார்.

    Next Story
    ×