search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    உடல் உறுப்பு தானம் செய்ய முதலமைச்சர் பதிவு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    X

    உடல் உறுப்பு தானம் செய்ய முதலமைச்சர் பதிவு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    • உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 1998 உறுப்புக் கொடையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
    • தற்போது 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடி மருந்துகளும், நாய்க்கடி மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.

    சென்னை:

    சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உறுப்பு தான தின நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, உடல் உறுப்பு மாற்று விழிப்புணர்வு கையேடு மற்றும் ''மறுபிறவி'' என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறுந்தகட்டினை வெளியிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்து, உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 1998 உறுப்புக் கொடையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு கொடையாளர்களின் மூலம் பெறப்பட்ட இதயம் 892, நுரையீரல் 912, கல்லீரல் 1,794, சிறுநீரகம் 3,544, கணையம் 42, சிறுகுடல் 15, வயிறு 1, கைகள் 7 என 7,207 முக்கிய உறுப்புகள் பயன்பாடு பெற்றிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 2021 முதல் தற்போது வரை 585 பேர் உடலுறுப்பு தானம் செய்திருக்கிறார்கள்.

    சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து உள்ளார்.

    உடலுறுப்பு கொடையாளர்களின் எண்ணிக்கை பெருகிவரும் சூழ்நிலையில் தொடர்ச்சியாக கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது. சிறுநீரகம் வேண்டி காத்திருப்பவர் 7,106 பேர், கல்லீரல் வேண்டி காத்திருப்பவர் எண்ணிக்கை 416 பேர், இதயத்திற்காக 83 பேர், நுரையீரல் வேண்டி காத்திருப்பவர் 54 பேர், இதயம் மற்றும் நுரையீரல் வேண்டி காத்திருப்பவர் 24 பேர், கணையம், கைகள், சிறுகுடல், வயிறு, சிறுநீரகம், இதயம் என 7,797 பேர் உடலுறுப்பு வேண்டி காத்திருப்பவர்களாக உள்ளனர்.

    இவர்களுக்கு விடியல் என்னும் இணையதளம் தொடங்கி அதன்மூலம் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பதிவு செய்திருக்கும் காலத்தினை பொறுத்து, உடலுறுப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடி மருந்துகளும், நாய்க்கடி மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கையிருப்பு இருந்ததா? என்பதை எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொண்டு பேச வேண்டும். டெங்கு என்பது பெரிய அளவில் கட்டுக்குள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×