search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை கார் குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது: இறந்த முபினுடன் சேர்ந்து பயங்கரவாத செயலுக்கு திட்டம் தீட்டிய பெயிண்டர்
    X

    கோவை கார் குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது: இறந்த முபினுடன் சேர்ந்து பயங்கரவாத செயலுக்கு திட்டம் தீட்டிய பெயிண்டர்

    • கைது செய்யப்பட்ட தாஹா நசீர் கோவையில் உள்ள கார் விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
    • கைதான தாஹா நசீரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் குண்டு வெடிப்பை நிகழ்த்திய ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஜமேஷா முபின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.

    இந்த வழக்கில் தொடர்புடையதாக தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் போத்தனூர் திருமலை நகர் மதீனா அவென்யூவை சேர்ந்த தாஹா நசீரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட தாஹா நசீர் கோவையில் உள்ள கார் விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கோவை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு காரணமான ஜமேஷா முபின் மற்றும் முகமது தவுபிக்குடன் சேர்ந்து சதி செய்ததாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கார் குண்டு தாக்குதல் நடப்பதற்கு முன்பு ஜமேசா முபினின் வீட்டிற்கு தஹா நசீர், முகமது தவுபிக் ஆகியோர் சென்றதாகவும், அப்போது அவர்கள், பயங்கரவாத செயலை செய்ய சதி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

    தாஹா நசீரின் டிஜிட்டல் சாதனங்களை ஆய்வு செய்தபோது, அவர் ஐஎஸ் அமைப்பு ஊக்கப்படுத்திய இலக்கியங்களை வைத்திருந்தார் என்பதும், கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பின்னர், குறிப்பிட்ட அடிப்படையிலான செல்போன் செயலியை பயன்படுத்தி சட்ட அமலாக்க முகமைகளின் கவனத்தை தவிர்க்க தடயங்களை மறைக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.

    கைதான தாஹா நசீரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×