search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் சாலைகளை அகலப்படுத்த மாநகராட்சி முடிவு
    X

    சென்னையில் சாலைகளை அகலப்படுத்த மாநகராட்சி முடிவு

    • நெரிசல் மிகுந்த சாலைகளை கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
    • தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் தற்போது வாகனங்கள் பெருகிவிட்டதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் குறித்த நேரத்துக்கு குறித்த இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

    இதையடுத்து சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நெரிசல் மிகுந்த சாலைகளை அகலமாக்குவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    இதற்காக நெரிசல் மிகுந்த சாலைகளை கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, திருவான்மியூர் லட்டிஸ் பாலம் சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை ஆகிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை 30.5 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    லட்டிஸ் பாலம் சாலையின் அகலம் 30.5 மீட்டராகவும், பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் நியூ ஆவடி சாலை 18 மீட்டராகவும் அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சில சாலைகளை விரிவுபடுத்துவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 4 சாலைகள் அகலப்படுத்தப்பட உள்ளன. அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மற்ற சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படும். சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் சாலையின் மேற்பரப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×