search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீபாவளி நெருங்குவதையொட்டி பட்டாசு வாங்க சிவகாசிக்கு படையெடுக்கும் மக்கள்
    X

    சிவகாசியில் உள்ள பட்டாசு கடையில் பட்டாசுகள் வாங்க வெளியூரிலிருந்து வந்த வாடிக்கையாளர்கள்.

    தீபாவளி நெருங்குவதையொட்டி பட்டாசு வாங்க சிவகாசிக்கு படையெடுக்கும் மக்கள்

    • பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன சிவகாசியில், 2500-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன
    • சிவகாசியில் விதவிதமான பேன்சி பட்டாசுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

    சிவகாசி:

    தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தற்போதே அதற்கான பரபரப்புகள் ஆரம்பமாகி விட்டன. புத்தாடைகள் வாங்க தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்திலும், மக்கள் ஜவுளிக்கடைகளை மொய்த்து வருகின்றனர். இதனால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், ஏனைய ஊர்களிலும் கடை வீதிகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.

    தீபாவளி என்றாலே பட்டாசு தான். குழந்தைகள் மட்டுமல்லாமல், இளைஞர்களும், பெரியவர்களும் பட்டாசு மற்றும் மத்தாப்பு வெடித்து மகிழாதவர்களே இருக்க மாட்டார்கள். தற்போது சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், பட்டாசுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன சிவகாசியில், 2500-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகள், சாத்தூர், விருதுநகர் சாலை, சங்கரன்கோவில் சாலைகளில் அதிகளவிலான பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. பட்டாசு நிறுவனங்களின் நேரடி விற்பனை கடைகளும் ஏராளமாக உள்ளது.

    இதனால் சிவகாசியில் பட்டாசுகளின் விலை ஓரளவு குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பட்டாசு பிரியர்கள் குவிந்து வருகின்றனர். பட்டாசு விற்பனை கடைகளில் அனைத்து விதமான பட்டாசு ரகங்கள், மத்தாப்பு வகைகள், நவீன ரக வெடிகள், வாண வெடிகள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    சிவகாசியில் விதவிதமான பேன்சி பட்டாசுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல், பட்டாசு தயாரிப்பு விதிமுறைகள் காரணமாகவும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் போன்றவற்றால் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

    இதைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் சிவகாசிக்கு வெளி மாவட்டம் மற்றும் இன்றி, அண்டை மாநில மக்களும் நேரடியாக வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விலை குறைவு, 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை மற்றும் வெடித்துப் பார்த்து வாங்கலாம் என்பதே இவர்களின் வருகைக்கு முக்கிய காரணம். இதனால் சிவகாசியின் ஒவ்வொரு பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதுகுறித்து, பட்டாசு மொத்த விற்பனனயாளர் ஒருவர் கூறுகையில், தொடக்கத்தில் ஆர்டர்கள் குறைவாக வந்தாலும், தற்போது நவராத்திரி விழாவைத் தொடர்ந்து விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் நேரடியாக சிவகாசி வந்து தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.

    இன்னும் தீபாவளிக்கு 10 நாட்களே உள்ளதால், வார இறுதி நாட்களான வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

    Next Story
    ×