search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலம்: ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை
    X

    தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலம்: ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை

    • கடந்த மாதம் வரை பட்டாசு விற்பனை சூடு பிடிக்காத நிலையில் கடந்த 20 நாட்களாக அதிக அளவில் ஆர்டர்கள் வந்தன.
    • கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்தது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தீபாவளி என்றாலே பட்டாசுதான் அனைவரின் நினைவுக்கும் வரும். தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,050-க் கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் கடந்த 10 மாதங்களாக பல்வேறு வகையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

    கடந்த மாதம் வரை பட்டாசு விற்பனை சூடு பிடிக்காத நிலையில் கடந்த 20 நாட்களாக அதிக அளவில் ஆர்டர்கள் வந்தன. இதனால் சிவகாசியில் உள்ள பிரபல நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை வரை பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டனர்.

    வழக்கமான உற்பத்தியை விட இந்த ஆண்டு 50 முதல் 70 சதவீதம் வரை உற்பத்தி அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிவகாசி அருகே இயங்கி வந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கடையில் இருந்த 13 பெண்கள் உள்பட 14 பேர் பரிதாபமாக கருகி பலியானர்.

    இந்த விபத்தை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் குழுவினர் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளில் தீவிர சோதனை செய்தனர். இதனால் பல இடங்களில் பட்டாசு உற்பத்தியும், விற்பனையும் பாதித்தது. பின்னர் நிலைமை சகஜமானது.

    விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்த ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் விற்பனையானதாக கூறப்படுகிறது.

    ஆனால் சிவகாசி பகுதியில் மட்டும் தீபாவளி பண்டியையொட்டி ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்தது.

    பெங்களூரு பகுதியில் ஏற்பட்ட பட்டாசு கடை விபத்தால் அங்கு பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு கடுமையான கட்டுப்பாடு விதித்த நிலையில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் ஓசூர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற்று கடந்த 10 நாட்களாக பட்டாசு விற்பனையில் தீவிரம் காட்டினர்.

    இதனால் மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு சிவகாசி உற்பத்தியாளர்கள் பெங்களூரு விற்பனை அதிகரித்ததாக கூறப்படுகிறது. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் பலர் பல்வேறு ஊர்களில் தற்காலிக கடைகள் அமைத்து பட்டாசுகளை விற்றனர்.

    தீபாவளியையொட்டி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக அளவில், கறிக்கோழி விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவரும், கறிக்கோழி உற்பத்தியாளருமான வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    கறிக்கோழியை பொறுத்தவரை ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ.95 செலவாகிறது. தற்போது கொள்முதல் விலை ரூ.98 நிர்ணயம் செய்திருந்தாலும், வியாபாரிகள் விலையை குறைத்தே கோழிகளை பிடிக்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு உயரவில்லை. இருப்பினும் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 கோடியே 50 லட்சம் கிலோ கறிக்கோழி ரூ.315 கோடிக்கு விற்பனையானது. இது கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் அதிகம்.

    கோழிகளின் தீவன பொருட்களின் விலையும் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதனால் பெரிய அளவில் பண்ணையாளர்களுக்கு லாபம் இல்லை. கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலைக்கே வியாபாரிகள் கோழிகளை பிடித்தால் பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×