search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பதவியை காப்பாற்றிக்கொள்ளவே மத்திய அரசுடன் தி.மு.க இணக்கமாக உள்ளது- தினகரன்
    X

    பதவியை காப்பாற்றிக்கொள்ளவே மத்திய அரசுடன் தி.மு.க இணக்கமாக உள்ளது- தினகரன்

    • விஜய் கட்சியால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
    • அனைவரும் பாஜகவை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    விஜய் கட்சியால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை. மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழக கவர்னரின் பதவிக்காலம் முடிவடைந்தும் அது குறித்து இதுவரை தி.மு.க வாய் திறக்காதது ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்.

    தற்போது தி.மு.க. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது அவர்களது பதவியை காப்பாற்றிக் கொள்ளதான். அதற்காக எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். மடியில் கனம் இருந்தால் பயம் இருக்கத்தான் செய்யும்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அவரது மத்திய அமைச்சரவையில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி இடம் பிடித்தார். ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்து விட்டு அடுத்த தேர்தலில் பாஜகவை கழற்றி விட்டு காங்கிரசுடன் இணைந்தார். இது குறித்து கேட்டால் ராஜதந்திரம் என்பார்கள்.

    பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகளவில் நடந்து வருகிறது. இதற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம்தான் முக்கிய காரணமாகும். ஆனால் தமிழகத்தில் போதை புழக்கத்தை கட்டுப்படுத்த தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வருங்கால சன்னதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தி.மு.க அரசு தேர்தல் கால எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதனால் தினமும் அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    2019-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலை இருந்தது. ஆனால் தற்போது அப்படி ஒன்றுமில்லை. அனைவரும் பாஜகவை ஏற்றுக் கொண்டு விட்டனர். இரட்டை இலை இருக்கிறது என்ற காரணத்தால் எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ செய்து வருகிறார். இதனை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் சகித்துக் கொள்ள முடியாமல் உள்ளனர். உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் ஒன்றிணைய எடப்பாடி பழனிச்சாமி தடையாக இருக்கிறார். தி.மு.க.வின் பி டீமாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். ஏனென்றால் அவர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக அப்படி செயல்படுகிறார்.

    எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது தான் வாக்குகளை பெறுவதற்காக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார். தென் தமிழகத்தில் 106 சமுதாய மக்களுக்கு எதிராக செயல்பட்டார். ஆனால் நீதிமன்றம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×