search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாதி பெயரை சொல்லி மிரட்டல்- கைதான தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயிலில் அடைப்பு
    X

    தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை போலீசார் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த காட்சி.

    சாதி பெயரை சொல்லி மிரட்டல்- கைதான தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயிலில் அடைப்பு

    • மாணிக்கம், வாலிபரை சாதி பெயரை சொல்லி ஆபாசமாக பேசியுள்ளார்
    • வாலிபர், இரும்பாலை போலீஸ் நிலையத்தில் மாணிக்கம் உள்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள திருமலைகிரியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் நடப்பு வாரம் பண்டிகை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு 8.30 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த பட்டியலின வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் நீ ஏன் கோவிலுக்குள் சென்றாய்? என வாலிபரை கண்டித்துள்ளனர்.

    மறுநாள் திருமலைகிரி பஞ்சாயத்து தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான மாணிக்கம் (வயது 55), அந்த வாலிபரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். அதன்படி அவரை 10 பேர் கோவிலுக்கு அழைத்து வந்துள்ளனர்.

    அப்போது மாணிக்கம், வாலிபரை சாதி பெயரை சொல்லி ஆபாசமாக பேசியுள்ளார். இனிமேல் கோவிலுக்குள் வரக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளார்.

    இந்த நிலையில் வாலிபரை, மாணிக்கம் மிரட்டும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது. இதையடுத்து பஞ்சாயத்து தலைவர் மாணிக்கத்தை, ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்தார்.

    இந்நிலையில், நேற்று அந்த வாலிபர், இரும்பாலை போலீஸ் நிலையத்தில் மாணிக்கம் உள்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார், உதவி கமிஷனர் ஆனந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் மாணிக்கம் மீது வன்கொடுமை, தகாத வார்த்தையால் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள், மாணிக்கத்தை கைது செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்தனர். இதனால் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    மாணிக்கத்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை ஜெயலில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதையடுத்து இன்று காலை, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து, அவரை சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×