search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்- அமலாக்கத்துறை நடவடிக்கை
    X

    ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்- அமலாக்கத்துறை நடவடிக்கை

    • டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    • சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது ஆலீம் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சென்னை:

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் 'சூடோபெட்ரைன்' என்ற போதைப்பொருளை கடத்திய வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். விசாரணையில் அவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணத்தை ஈட்டியதும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இறங்கினார்கள். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே ஜாபர் சாதிக் உள்பட இந்த வழக்கில் கைதான நபர்கள் மீது டெல்லி சிறப்பு கோர்ட்டில் மத்திய போதைப்பொருள் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது ஆலீம் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைக்கோர்த்து இந்த வழக்கில் தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ரூ.55.30 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜாபர் சாதிக், சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் ஈட்டிய பணத்தை திரைப்பட தயாரிப்பு, ஓட்டல்கள், சரக்கு நிறுவனம் போன்ற தொழில்களில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே அவருடைய பெயரில் இருந்த அசையும், அசையா சொத்துகள், மனைவி அமீனா பானு மற்றும் பினாமிகள் மைதீன் கானி, முகமது முஸ்தபா, ஜாமல் முகமது ஆகியோரின் பெயரில் இருந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

    ஜே.எஸ்.எம். சொகுசு ஓட்டல் (புரசைவாக்கம்), ஆடம்பர பங்களா வீடு உள்பட 14 அசையா சொத்துகள், 7 சொகுசு கார்கள் உள்பட மொத்தம் ரூ.55.30 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×