search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடப்பாடி பழனிசாமி-கனிமொழி எம்.பி. ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடப்பாடி பழனிசாமி-கனிமொழி எம்.பி. ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வருகை தந்தார்.
    • ஒரே நேரத்தில் கோவிலுக்குள் இருந்ததால் அவர்கள் சந்திக்க கூடும் என்று வெளியில் காத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

    மதுரை:

    மதுரை வலையங்குளத்தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட இந்த மாநாடு வெற்றி பெற்றதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வருகை தந்தார்.

    கிழக்கு நுழைவு வாயில் வழியாக கோவிலுக்குள் சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்த அவர் பிரகாரங்கள் வழியாக சுற்றி வந்தார். பொற்றாமரை குளத்தின் படிக்கட்டுகளில் நின்றவாறு கோவில் அழகை ரசித்தார்.

    இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் பாராளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இன்று இரண்டாவது நாளாக அவர்கள் சாத்தமங்கலம் மாநகராட்சி பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டனர். இதையடுத்து கனிமொழி தலைமையிலான நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.

    எடப்பாடி பழனிசாமி கோவிலுக்குள் சென்ற சிறிது நேரத்தில் கனிமொழி எம்.பி.யும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். இருவரும் ஒரே நேரத்தில் கோவிலுக்குள் இருந்ததால் அவர்கள் சந்திக்க கூடும் என்று வெளியில் காத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

    ஆனால் இருவரும் வெவ்வேறு பிரகாரங்களில் இருந்தனர். அவர்கள் சந்திக்கவில்லை என்று உடன் சென்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் முதலில் எடப்பாடி பழனிசாமியும், அதன் பிறகு கனிமொழி எம்.பி. தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களும் கோவிலை விட்டு வெளியே வந்து புறப்பட்டு சென்றனர்.

    இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×