search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    200 தொகுதிகளில் வெற்றி, முதலமைச்சரின் கனவு பலிக்காது- எடப்பாடி பழனிசாமி
    X

    200 தொகுதிகளில் வெற்றி, முதலமைச்சரின் கனவு பலிக்காது- எடப்பாடி பழனிசாமி

    • 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 9 இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
    • 1991-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாதது மேலிட உத்தரவு. பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்துதான் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று ப.சிதம்பரம் கூறி இருக்கிறாரே?

    பதில்:- ப.சிதம்பரத்துக்கும் எங்கள் கட்சிக்கும் என்ன சம்பந்தம். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்பது எங்கள் கட்சி எடுத்த முடிவு. அவரது கட்சி முடிவு அல்ல.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலின்போது ஜனநாயக படுகொலை நடைபெற்றது. வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல், ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பதை போல வாக்காளர்களை தினமும் அழைத்து சென்று பட்டியில் அடைத்து அவர்களை கொடுமைப்படுத்திய காட்சியை பார்த்திருப்பீர்கள்.

    தேர்தல் ஆணையம் அதை கண்டு கொள்ளவே இல்லை. அது மாநில அரசுக்கு துணை நிற்கிறது. போலீசார் துணை நிற்கிறார்கள். அரசு அதிகாரிகள் துணை நிற்கிறார்கள். அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பண பலம், படை பலத்தை பயன்படுத்தி, அதிகமான பரிசு பொருட்களை கொடுத்து அந்த தேர்தலில் தில்லுமுல்லு செய்து தேர்தல் நடைபெற்று முடிந்தது.

    தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என்பதால் தான் அ.தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி தொகுதி விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில்தான் வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 6 ஆயிரம் ஓட்டுகள்தான் குறைவாக வாங்கினோம்.

    எங்களுக்கு எவ்வளவு ஓட்டுகள் கிடைத்துள்ளது என்பது தெரிந்து விட்டது. இனி ஏன் அங்கு போட்டியிட வேண்டும். போட்டியிட்டால் விடவா போகிறார்கள். ஆட்சி அதிகார பலத்தை பயன்படுத்துவார்கள். பணத்தை வாரி இறைப்பார்கள்.

    பரிசு பொருட்களை அள்ளி கொடுப்பார்கள். பண மழை பொழியும். ஜனநாயக படுகொலை நடைபெறும். சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது. எனவேதான் அ.தி.மு.க. இந்த தேர்தலை புறக்கணிக்கிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 36 இடங்களில் கொட்டகை அமைத்து வாக்காளர்களை அடைத்து வைத்து கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்காக அமைச்சர்கள் பாடுபட்டார்கள்.

    கொட்டகையில் அடைத்து வைத்திருந்தால் அங்கு நானே நேரில் வந்து வாக்கு சேகரிப்பேன் என்று சவால் விட்டேன். உடனே அந்த வாக்காளர்களை பஸ்சில் ஏற்றி ஊர் ஊராக சுற்றுலா அழைத்து சென்றார்கள். அப்படி இருக்கும்போது அங்கு எப்படி சுதந்திரமாக தேர்தல் நடக்கும்.

    கேள்வி:- அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாவிட்டால் தொண்டர்கள் உற்சாகம் இழந்து விட மாட்டார்களா?

    பதில்:- தொண்டர்கள் எப்படி உற்சாகம் இழப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு பெருகி இருப்பதால் அவர்கள் உற்சாகமாகத்தான் இருக்கிறார்கள்.

    கேள்வி:- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதே போல் சட்டமன்ற தேர்தலிலும் எல்லா இடத்திலும் தி.மு.க. வரும் என்று சொன்னார்கள். ஆனால் அ.தி.மு.க. 75 இடங்களில் வெற்றி பெற்றது. 2019 பாராளுமன்ற தேர்தலின்போது சட்டமன்ற தொகுதிகளை பொருத்தவரை 2 தொகுதிகளில் தி.மு.க.வை விட அதிக ஓட்டுகள் எங்களுக்கு கிடைத்தது.

    இப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 சட்டசபை தொகுதிகளில் தி.மு.க.வை விட அதிக ஓட்டுகள் பெற்றுள்ளோம். அதில் அமைச்சர் தொகுதியில் 2 இடங்களில் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம்.

    அப்படியென்றால் இனி வரும் சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். எனவே பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு. மக்கள் பிரித்து பார்த்துதான் ஓட்டு போடுகிறார்கள்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 9 இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளில் தி.மு.க.வுக்கு டெபாசிட் பறிபோனது. அங்கெல்லாம் மீண்டும் அவர்கள் ஜெயிக்கவில்லையா?

    1991-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். எனவே மாறி மாறிதான் வெற்றி வரும். எல்லா தேர்தல்களிலும் எல்லா கட்சிகளும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. வெற்றி தோல்வி மாறி மாறிதான் வரும்.

    2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×