search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி மீது வெடிகுண்டு வீசுவோம்-  மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
    X

    'எடப்பாடி பழனிசாமி மீது வெடிகுண்டு வீசுவோம்'- மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    • போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் அந்த மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
    • காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த செல்போன் எண்ணின் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு மர்மநபர் ஒருவர் போன் செய்துள்ளார்.

    அதில் போலீசுடன் பேசிய மர்ம நபர், பூலித்தேவன் ஜெயந்திவிழாவையொட்டி தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தால் அவர் மீது வெடிகுண்டு வீசுவோம் என்று கூறியுள்ளார்.

    மேலும் புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் அந்த மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் உடனே போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    அந்த நபர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த செல்போன் எண்ணின் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த சிக்னல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை காண்பித்தது. இதனால் தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று சிக்னல் மூலமாக அந்த நபரை கண்டுபிடித்தனர். அந்த நபர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை மெயின்ரோட்டை சேர்ந்த பூசைப்பாண்டியன் என்பவரது மகன் வெள்ளத்துரை (வயது 32) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை தனிப்படையினர் பிடித்து தென்காசிக்கு கொண்டு வந்தனர். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த நபர் ஏற்கனவே கடந்த ஆண்டும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட வெள்ளத்துரை மீது புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இதுபோன்று பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×