search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு: மதுரையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு: மதுரையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • தி.மு.க. அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

    மதுரை விமான நிலைய உள்வளாகத்தில் இருந்து வெளியே வருவதற்காக சிறிய பஸ்சில் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார். அப்போது அதே பஸ்சில் இருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ராஜேசுவரன், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசி தனது செல்போனில் படம் பிடித்தார்.

    இதனால் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் அவரை தடுத்தனர். அப்போது அங்கு மோதல் ஏற்பட்டது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக இருதரப்பிலும் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அ.ம.மு.க. பிரமுகர் ராஜேசுவரன் அளித்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீது, அ.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் ராஜேசுவரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை 11 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கருப்புச்சட்டை அணிந்திருந்தனர். அவர்கள் தி.மு.க. அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், அண்ணாதுரை, பைக்காரா கருப்புசாமி, சோலைராஜா, முத்துவேல், கலைச்செல்வம், கே.வி.கே. கண்ணன், பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், பரவை ராஜா, வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன், ராஜேந்திரன், ஓம்.கே. சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.வினர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×