search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பள்ளிக்கு பூட்டுப்போடப்பட்டதால் 1 மணி நேரம் வெளியே தவித்த மாணவ, மாணவிகள்
    X

    பள்ளிக்கு பூட்டுப்போடப்பட்டதால் 1 மணி நேரம் வெளியே தவித்த மாணவ, மாணவிகள்

    • பள்ளி நேரம் முடிந்ததும் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டு போடப்பட்டு மூடப்படும்.
    • ஒரு பூட்டு தான் பள்ளி நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மாவடிப் பண்ணையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தினமும் பள்ளி நேரம் முடிந்ததும் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டு போடப்பட்டு மூடப்படும்.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு சத்துணவு முட்டை வந்துள்ளது. எனவே பணியாளர் முட்டையை இறக்குவதற்காக வருகை தந்துள்ளார். அப்போது ஏற்கனவே பள்ளி சார்பில் போடப்பட்டிருந்த பூட்டுக்கு மேல் மற்றொரு பூட்டும் போடப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பணியாளர் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர் ஒரு பூட்டு தான் பள்ளி நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையில் காலையில் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகை தர ஆரம்பித்தனர். அவர்கள் பள்ளி நுழைவு வாயிலில் பூட்டுப் போடப்பட்டிருந்ததால் பள்ளிக்குள் போக முடியாமல் நீண்ட நேரம் வெளியிலேயே காத்திருந்தனர்.

    அதன்பின்னர் பள்ளி ஆசிரியர்கள் வந்து அந்த பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து பூட்டை உடைத்து மாணவ, மாணவிகள் உள்ளே சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த பள்ளியின் நுழைவு வாயிலை பூட்டு போட்டு பூட்டிச் சென்றது தெரியவந்தது.

    பள்ளி கதவுகளுக்கு பூட்டுபோட்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மாணவ, மாணவிகள் வெளியே காத்திருந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணபட்டது.

    Next Story
    ×