என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
- கிப்ட் பேக் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் தப்பிக்க வழியின்றி அந்த அறைக்குள்ளேயே உடல் கருகினர்.
- ரெங்கபாளையம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 43). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த எம்.புதுப்பட்டி அருகே ரெங்கபாளையம் கிராமத்தில் கம்மாபட்டி பகுதியில் கனிஷ்கர் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதன் அருகிலேயே கனிஷ்கர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு விற்பனை கடையும் வைத்திருந்தார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த கடையின் பின்புறம் அனுமதி பெறாமல் விதிகளை மீறி தகர செட் அமைத்து உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கிப்ட் பாக்ஸ் பேக்கிங் செய்து வந்தார். நேற்று மதியம் 1.30 மணி அளவில் அங்கு பட்டாசு வாங்க வந்த வெளியூரை சேர்ந்த நபர்கள் சரவெடி ஒன்றை பரிசோதனை முறையில் கடையின் முன்பாக வெடித்து பார்த்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அதிலிருந்து தீப்பொறி பறந்து விபத்து ஏற்பட்டது. அடுத்த வினாடி அங்கிருந்த அனைத்து வெடிகளும் வெடித்து சிதறின. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிப்ட் பேக் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் தப்பிக்க வழியின்றி அந்த அறைக்குள்ளேயே உடல் கருகினர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ முழுமையாக அணைப்பட்ட பிறகே பலியானவர்களின் உடலை மீட்கும் பணி நடந்தது.
இதில் அங்கு பணியாற்றிய வடக்கு அழகாபுரியைச் சேர்ந்த மகாதேவி (50), பஞ்சவர்ணம் (35), பாலமுருகன் (30), தமிழ்ச்செல்வி (55), எஸ்.அம்மாபட்டியை சேர்ந்த முனீஸ்வரி (32), அழகாபுரியைச் சேர்ந்த தங்கமலை (33), அனிதா (45), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த பாக்கியம் (35), குருவம்மாள் (55), இந்திரா (45), லட்சுமி (28), செல்லம்மாள் (40), முத்துலட்சுமி (36) ஆகிய 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் படுகாயம் அடைந்த சின்னத்தாய் (35), பொன்னுத்தாய் (55) ஆகிய இருவரும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கரிக்கட்டையாக மீட்கப்பட்ட பலியான 13 பேரின் உடல்களும் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களும் ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல் சிவகாசி அருகே மாரனேரி கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு உற்பத்திக்காக மருந்து கலவை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் நதிக்குடியை சேர்ந்த வேம்பு (60) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். ஒரே நாளில் பட்டாசு ஆலை விபத்துகளில் 14 பேர் பலியாகினர்.
12 பெண்கள் உள்பட 13 பேரை உயிரை பலி வாங்கிய ரெங்கபாளையம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முடிவில் ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, போர்மேன் கனகு என்ற கனகராஜ் (41), மேலாளர் ராம்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது பட்டாசு தயாரிக்கும் வெடி மருந்துகளை முறையாக கையாளாதது, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது, பட்டாசுகளை பாதுகாப்பின்றி விதிகளை மீறி வைத்திருந்தது என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தொழிற் பாதுகாப்புத் துறை இணை இயக்குனர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்