search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து- தொழிலாளி பலி
    X

    வெடி விபத்தில் உருக்குலைந்த பட்டாசு ஆலை.

    சேலம் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து- தொழிலாளி பலி

    • ஆலையில் நாட்டு வெடி உள்ளிட்ட அனைத்து விதமான மத்தாப்பூ மற்றும் வெடிகளும் தயாரிக்கப்படுகிறது.
    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனித்தனியாக 5 இடங்களில் பட்டாசு ஆலை சிறிய அளவில் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் நாட்டு வெடி உள்ளிட்ட அனைத்து விதமான மத்தாப்பூ மற்றும் வெடிகளும் தயாரிக்கப்படுகிறது. வழக்கம் போல இன்று பட்டாசு ஆலையில் சிலர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த சத்தம் அருகில் இருந்தவர்களுக்கு கேட்டது.

    இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது அங்கு தீக்காயத்தில் இருந்தவர்களை மீட்க முயற்சி செய்தனர். மேலும் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கும், வாழப்பாடி தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் படுகாயம் அடைந்த சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (55), சின்னனூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (30), முத்துராஜ் (29), சுரேஷ் ஆகிய 4 பேரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பட்டாசு வெடித்த ஆலை முழுவதும் தண்ணீரை ஊற்றி பீச்சு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார்.

    போலீசாரின் விசாரணையில் ஜெயராமன் பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்க முற்படும்போது ஏற்பட்ட உரசலில் மருந்து வெடித்து சிதறியது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×