search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான நிலையான கட்டணம் குறைப்பு- மின்சார வாரியம் தகவல்
    X

    தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான நிலையான கட்டணம் குறைப்பு- மின்சார வாரியம் தகவல்

    • அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
    • வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மின்கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின்சார நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின்சார கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

    வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்சார நுகர்வோர்கள் பயன் அடைவார்கள். தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் ஆகிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

    தற்போது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மின்சார நுகர்வு 500 யூனிட்டிலிருந்து, 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும்போது, அதற்கான மின்சார கட்டணத் தொகையானது 58.10 சதவீதம் அதிகரித்து மொத்தம் ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின்சார நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் தற்போதைய புதிய மின்சார கட்டணத்தில் முற்றிலுமாக களையப்பட்டுள்ளது.

    கிராமப்புற பகுதிகளில் இயங்கி வரும் நூலகங்களுக்கான மின்சார கட்டணம் யூனிட் ஒன்றிற்கு ரூ.5.75 ஆகவும், நிலைக் கட்டணமாக மாதம் ஒன்றிற்கு ரூ.60 ஆகவும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின்சார கட்டணத்தை மானியம் இல்லா வீட்டு விகிதப்பட்டியலில் கணக்கீடு செய்து 30 சதவீதமாக குறைப்பதற்கு இந்த ஆணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    93 சதவீதம் (2.26 லட்சம்) சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு, குறைந்த அளவாக யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் மட்டுமே உயர்ந்துள்ளது. 53 சதவீதம் (19.28 லட்சம்) வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.50 மட்டுமே உயர்ந்துள்ளது. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல், யூனிட் ஒன்றிற்கு 70 பைசா மட்டுமே உயர்ந்துள்ளது. வாரியத்தின் பரிந்துரையை ஆணையம் ஏற்றுக்கொண்டதால், கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், உயர் அழுத்த மின்சார நுகர்வோர்களுக்கான நிலையான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மானியம் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×