search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் விநாயகர் ஊர்வலம்
    X

    சென்னையில் செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் விநாயகர் ஊர்வலம்

    • சென்னையில் சுமார் 1500 பெரிய சிலைகள் பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட உள்ளது.
    • விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 17 வழித்தடங்களை போலீசார் ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்துள்ளனர்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டு பின்னா ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் 1 லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட உள்ளது.

    சென்னையில் சுமார் 1500 பெரிய சிலைகள் பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட உள்ளது. இதுதவிர சிறிய சிலைகளை பலரும் வீட்டில் வைத்து வழிபடுவார்கள். இந்த சிலைகளையும் பெண்கள் பெரிய சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கொண்டு போய் வைத்து விடுவார்கள்.

    இதுபோன்று பல்லாயிரக்கணக்கான சிலைகள் பெரிய சிலைகளின் அருகில் வைக்கப்பட்டிருக்கும். பெரிய சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் வாகனங்களில் இந்த சிறிய சிலைகளையும் சேர்த்தே எடுத்துச் செல்வார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படும் நாளில் இருந்து 7 நாட்கள் கழித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அந்த வகையில் வருகிற 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் அனைத்தும் செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது.

    சென்னை மற்றும் தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதன்படி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 இடங்களிலும் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடல் பகுதியிலும் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

    விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 17 வழித்தடங்களை போலீசார் ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்துள்ளனர். அந்த வழித்தடங்கள் வழியாக மட்டுமே சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட உள்ள சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது.

    அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் வைக்கப்படும். சிலைகளை நீலாங்கரை பல்கலை நகரில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், ஆர்.கே. நகர், தங்க சாலை, ராயபுரம், தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளின் சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும், திருவொற்றியூர் சுற்று வட்டாரப் பகுதிகளின் சிலைகள் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பகுதியிலும், செங்குன்றம் துணை கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட எண்ணூர் மற்றும் சுற்றியுள்ள சிலைகள் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியிலும் கரைக்கப்பட உள்ளன.

    விநாயகர் சிலைகளை வைக்கும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். தேவையில்லாத வகையில் மத உணர்வை தூண்டும் வகையில் ஒலி பெருக்கியில் பேசக் கூடாது.

    24 மணி நேரமும் சிலை பராமரிப்பாளர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுபாடுகளையும் போலீசார் விதித்துள்ளனர்.

    சென்னை மாநகர் முழுவதும் சுமார் 15 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×