search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தி.மு.க.வின் குறைகளே அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்- ஜி.கே.வாசன்
    X

    தி.மு.க.வின் குறைகளே அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்- ஜி.கே.வாசன்

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழையால் சீர்காழி பகுதி பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இடைத்தேர்தலில் களம் கண்ட கட்சிகள்.

    தூத்துக்குடி:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது பணியை செய்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவே கருதுகிறேன்.

    வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அரசாக தி.மு.க. செயல்பட்டு கொண்டிருப்பதாக வாக்காளர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழையால் சீர்காழி பகுதி பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். அப்போது கூட தமிழக அரசு விவசாயிகளின் எண்ணங்களை அறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தவறிவிட்டது. தற்போது டெல்டாவில் 5 மாவட்டங்களில் மழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு அவர்களுக்கு கைகொடுக்க வேண்டும். ஆபத்தான நேரத்தில் விவசாயிகளை காப்பாற்றக் கூடிய அரசாக, இந்த அரசு செயல்பட தவறுகிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. பாதிக்கப்பட்ட நிலங்களை சென்று பார்க்க அதிகாரிகளை முறையாக அனுப்புவது கிடையாது. எனவே, விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் அரசு செயல்படுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது.

    அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இடைத்தேர்தலில் களம் கண்ட கட்சிகள். இதில் பல தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூட்டணியில் கலந்து பேசினோம். உண்மை நிலைக்கு ஏற்றவாறு, வெற்றி நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுத்து உள்ளோம். அதில் மாற்று கருத்து கிடையாது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த 19 மாதங்களில் எதிர்மறை ஓட்டுக்கள் அதிகரித்து வருகிறது. தி.மு.க.வின் குறைகளை பற்றி பேசுவதற்கு ஒரு பட்டியல் தேவைப்படுகிறது. அதுவே அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.

    கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம் வைப்பது தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கும் நல்ல கருத்துக்களை கேட்டு சரியான முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×