search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை: மாஜிஸ்திரேட்டிடம் குறுக்கு விசாரணை கேட்ட வழக்கில் வருகிற 21-ந்தேதி தீர்ப்பு
    X

    சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை: மாஜிஸ்திரேட்டிடம் குறுக்கு விசாரணை கேட்ட வழக்கில் வருகிற 21-ந்தேதி தீர்ப்பு

    • தூத்துக்குடி நீதித்துறை நடுவர் சக்திவேல் 36-வது அரசு சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
    • 100 பக்கம் சாட்சியம் உள்ளது. இதனை எவ்வாறு குறுக்கு விசாரணை செய்வீர்கள்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:-

    சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் நிலையில், தூத்துக்குடி நீதித்துறை நடுவர் சக்திவேல் 36-வது அரசு சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

    என் தரப்பிலிருந்து நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய இயலவில்லை. தற்போது நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் விசாரணை நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    இது நியாயமான விசாரணையை மறுக்கும் வகையில் உள்ளது. ஆகவே கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தத.

    இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் மாஜிஸ்திரேட் அளித்த சாட்சியம் 100 பக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பலமுறை வாய்ப்பளித்தும் ரகு கணேஷ் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. ஆகவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

    ரகு கணேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாஜிஸ்திரேட் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும். எனவே அதற்கு அனுமதிக்க வேண்டுமென வாதிட்டார்.

    அப்போது நீதிபதி கூறுகையில், 100 பக்கம் சாட்சியம் உள்ளது. இதனை எவ்வாறு குறுக்கு விசாரணை செய்வீர்கள். திறந்த நீதிமன்றத்தில் தான் நீதிபதி சாட்சியும் அளித்துள்ளார். அவ்வாறு இருக்கும்போது மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த கேட்பது வழக்கை இழுத்தடிக்கும் மாதிரி உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கோரி தீர்ப்புக்காக வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Next Story
    ×