search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கர்நாடகாவில் பருவமழை தீவிரம்- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு
    X

    கர்நாடகாவில் பருவமழை தீவிரம்- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு

    • கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காததால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிபடியாக சரிந்து வருகிறது.
    • நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடும் விவகாரத்தில் மோதல் இருந்து வருகிறது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காததால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிபடியாக சரிந்து வருகிறது.

    இதனால் வழக்கமாக நடப்பாண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடகு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இந்த அணை மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 12,867 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று 92.80 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 94.40 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

    இந்த அணையில் இருந்து 507 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல் கேரள மாநிலம் வயநாட்டை நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்டுள்ள மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து 9,179 கன அடியாக உள்ளது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியாகும். இன்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 1,250 கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் மேகதாது வழியாக கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு வருகிறது. இன்று காலை பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து 1500 கன அடியாக உள்ளது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    நேற்று 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1500 கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 43 கன அடியில் இருந்து 227 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் 8 மணி அளவில் அணை நீர்மட்டம் 39.75 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 11.96 டி.எம்.சி.யாக உள்ளது.

    Next Story
    ×