search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கனமழை எச்சரிக்கை- ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்
    X

    கனமழை எச்சரிக்கை- ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • இந்திய கடற்படை, கடலோர காவல் படையினரும் ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

    மண்டபம்:

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை அல்லது நாளை மறுநாள் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் தென்னிந்தியாவில் இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்தநிலையில் ராமேசுவரம் பகுதியில் இன்று அதிகபட்சமாக 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதேபோல் மண்டபத்தில் 12.20 மி.மீ. மழையும், பாம்பனில் 8.30 மி.மீ. மழையும், தங்கச்சி மடத்தில் 11.40 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கனமழை பெய்யும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைத் தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய கடற்படை, கடலோர காவல் படையினரும் ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

    இதற்கிடையே நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் பாம்பன், மண்டபம், ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பெரும்பாலானோர் நள்ளிரவில் முன் கூட்டியே கரை திரும்பினர். அதேபோல் இன்று காலையும் குறைந்த எண்ணிக்கையிலான படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளன.

    Next Story
    ×