search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இறந்த மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவர்
    X

    இறந்த மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவர்

    • ஆசை மனைவியை காப்பாற்றுவதற்காக கோபாலகிருஷ்ணன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்த்தார்.
    • பல லட்சம் ரூபாய் செலவு செய்தும், டாக்டர்கள் ஒரு கட்டத்தில் கை விரித்து விட்டனர்.

    அரியலூர்:

    எத்தகைய சூழலிலும் கணவருக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும் பக்கபலமாக இருந்து, அவர்களின் இன்பத்திலும், துன்பத்திலும் முழுமையாக பங்கெடுத்து வாழ்வை முழுமையாக்குகிறார்கள்.

    அவ்வாறு அமைந்த கணவருக்கோ அல்லது மனைவிக்கோ கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்று சொல்வது உண்டு. அதனை நிஜமாக்கும் வகையில் ஒருவர் தனது மனைவிக்கு கோவில் கட்டி, கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார்.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 42). இவர் திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கற்பகவல்லி(36). இவர்களுக்கு தற்போது 5 வயதில் கோமகன் என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் கற்பகவல்லிக்கு 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆசை மனைவியை காப்பாற்றுவதற்காக கோபாலகிருஷ்ணன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்த்தார். பல லட்சம் ரூபாய் செலவு செய்தும், டாக்டர்கள் ஒரு கட்டத்தில் கை விரித்து விட்டனர்.

    இதனால் வேதனை அடைந்து கோபாலகிருஷ்ணன் சோர்ந்துபோனாலும், போராடுவதை விடவில்லை. தனக்காக கணவர் படும் வேதனையை அறிந்த கற்பகவல்லி ஒரு தருணத்தில் இனிமேல் எனக்கு மருத்துவம் பார்க்க வேண்டாம், விட்டு விடுங்கள் என்றார். இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு கற்பகவல்லி உயிரிழந்தார்.

    மனைவி இறந்த துக்கத்திலும், மீளா துயரத்திலும் இருந்த கோபாலகிருஷ்ணன், தனது வீட்டின் அருகில் உள்ள சொந்த நிலத்திலேயே மனைவியை அடக்கம் செய்தார்.

    பின்னர் ஷாஜகான் தன் மனைவி மும்தாஜுக்காக தாஜ்மஹால் கட்டியதுபோல், கோபாலகிருஷ்ணனும் தன் மனைவி அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் ரூ.15 லட்சம் செலவில் கோவில் ஒன்றை கட்டி, அதில் 3 அடி உயரத்தில் கற்பகவல்லியை அம்மன் உருவத்தில் சிலை செய்து வைத்து நேற்று கும்பாபிஷேகம் நடத்தினார்.

    இதனை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து சென்றனர்.

    Next Story
    ×