search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஷச்சாராயம் குடித்து 13 பேர் பலி- சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல்
    X

    விஷச்சாராயம் குடித்து 13 பேர் பலி- சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல்

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    • கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் பலியானார்கள். செங்கல்பட்டில் 8 பேர் உயிர் இழந்தனர். மொத்தம் 21 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு படிப்படியாக வீடு திரும்பி வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மரக்காணத்தில் 13 பேர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டடர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மரக்காணம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுவை மற்றும் சென்னையில் இருந்து வந்த மெத்தனால் என்ற விஷசாராயத்தை குடித்து 13 பேர் உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி உள்ளிட்ட 12 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. சுனில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதியிடம் ஒப்படைத்தார்.

    இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆவணங்களில் சில ஆவணங்கள் இல்லை என்றும் அவற்றை ஒப்படைக்கும் மாறும் மரக்காணம் போலீசாருக்கு சி.பி.சிஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும் கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். 12 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க இன்று விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×