search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலவச வீட்டுமனைப்பட்டாவில் முறைகேடு- கிராம நிர்வாக அலுவலர்-தலையாரி டிஸ்மிஸ்
    X

    இலவச வீட்டுமனைப்பட்டாவில் முறைகேடு- கிராம நிர்வாக அலுவலர்-தலையாரி டிஸ்மிஸ்

    • தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாலுகா அலுவலகத்தில் பெறப்பட்ட தகவலில் இது உண்மை என கண்டறியப்பட்டது.
    • குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின் போது கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் பேரில் உரிய விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஆரைக்குளம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் மாடசாமி.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப்பட்டாவை தனது பதவியை பயன்படுத்தி அவரது உறவினருக்கு வழங்கியதாகவும், அதனை 2019-ம் ஆண்டு தனது குடும்பத்தினர் பெயருக்கு பெயர் மாற்றம் செய்ததாக புகார் எழுந்தது.

    இதேபோல் தலையாரியாக பணியாற்றும் மந்திர மூர்த்தி என்பவரும் முறைகேடாக உறவினருக்கு இலவச பட்டா வழங்கி பின்னர் குடும்பத்தினர் பெயருக்கு பெயர் மாற்றம் செய்ததாக அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.

    மேலும் கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோர் தங்களது பதவிகளை பயன்படுத்தி பட்டா மோசடி செய்ததாகவும், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் 20 ஆண்டுகளுக்கு பெயர் மாற்றம் செய்யக்கூடாது என்று விதி இருக்கும்போது ஒரே ஆண்டில் முறைகேடாக பெயர் மாற்றம் செய்து மோசடி செய்துள்ளனர் என கூறி அப்பகுதியை சேர்ந்தவர்கள் நெல்லை ஆர்.டி.ஓ. அலுவலக்தில் புகார் மனு அளித்தனர்.

    அப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாலுகா அலுவலகத்தில் பெறப்பட்ட தகவலில் இது உண்மை என கண்டறியப்பட்டதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

    இது தொடர்பாக குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின் போது கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் பேரில் உரிய விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதன்படி ஆர்.டி.ஓ. சந்திரசேகர் கடந்த 6-ந் தேதி இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். அதில் இலவச வீட்டுமனைப்பட்டாவில் முறைகேடு செய்தது உறுதியானது.

    இதைத்தொடர்ந்து ஆரைக்குளம் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமி மற்றும் தலையாரி மந்திமூர்த்தி ஆகிய 2 பேரையும் நிரந்தர பணிநீக்கம் செய்து நெல்லை ஆர்.டி.ஓ.சந்திரசேகர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் அவர்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனைப்பட்டா ரத்து செய்யப்படவில்லை. விரைவில் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×