என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு போட்டி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள்
- காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்தும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தொடங்கிய நிலையில் அந்த ஊர் தற்போது முதலே விழாக்கோலம் பூண்டு வருகிறது.
அலங்காநல்லூர்:
தமிழர்களின் பாரம்பரிய உலகப் புகழ்பெற்ற வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், ஜல்லிக்கட்டு கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
அதன்படி முதற்கட்டமாக ஜல்லிக்கட்டு அழைப்பிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பாக உள்ள மந்தை திடலில் நடைபெற உள்ளது. இதையொட்டி அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் காளைகள் வந்து சேரும் இடம், காளைகள் நிறுத்தும் இடங்களில் டிராக்டர் மூலம் சுத்தப்படுத்தும் பணிகளும் மும்முரம் அடைந்துள்ளது.
இதேபோன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி அங்குள்ள மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பாலமேடு பேரூராட்சி சார்பில் வாடிவாசல் முன்புறம், காளைகள் நிறுத்துமிடம் காளைகள் வந்து சேரும் இடங்களில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று வாடிவாசல் வண்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியது. இதனையடுத்து தற்போது மைதானத்தை தூய்மைபடுத்தும் பணி, பார்வையாளர்கள் அமரும் கேலரி, காளைகள் வந்து சேரும் இடம், காளைகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை பாலமேடு கிராம பொது மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் கமிட்டி நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், இந்தாண்டு 2024 பாலமேடு ஜல்லிக்கட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகள்படி ஜனவரி 16-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு தமிழக முதல்வர் சார்பில் முதல் பரிசாக சொகுசு கார், இரண்டாவது பரிசாக பைக், வழங்கப்பட உள்ளது. இதே போன்று சிறந்த காளைக்கு முதல் பரிசாக பைக், இரண்டாவது பரிசாக கன்றுடன் கூடிய நாட்டு பசு, பரிசாக வழங்கப்பட உள்ளது.
மேலும் விலை உயர்ந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், தங்கக்காசு, சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக கமிட்டியினர் தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு பணிகள் தொடங்கிய நிலையில் அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்தும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
கடலை மிட்டாய், புண்ணாக்கு ரொட்டி தீவனம், வைக்கோல் உள்ளிட்ட உணவு பொருட்களை ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உணவாக கொடுத்து தங்களது காளைகளை ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க தயார்படுத்தி வருகின்றனர். மேலும் மாடுபிடி வீரர்கள் தங்களது குல தெய்வங்களுக்கு காப்பு கட்டி, விரதம் இருந்து காளைகளை வடத்தில் கட்டி பயிற்சி கொடுத்து வருகிறார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தொடங்கிய நிலையில் அந்த ஊர் தற்போது முதலே விழாக்கோலம் பூண்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புதுமையை படைத்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது காளைகளினால் உயிர்ச்சேதம், காயங்களை தவிர்த்திடும் வகையில், இந்திய விலங்குகள் நல வாரியத்தின் பரிந்துரையின்பேரில் காளைகளின் கொம்புகளில் பிளாஸ்டிக் மற்றும் ரப்பரால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் பொருத்தவும் ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வருகிறது.
ஆனாலும் காளைக்கும், காளையர்களுக்கும் இடையே நடக்கும் இந்த வீர விளையாட்டில் சொகுசு கார், பைக்கை குறித்து களம் இறங்க இருதரப்பிலும் தயாராகி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்