search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதல் முறையாக சென்னையில் ஜல்லிக்கட்டு: மார்ச் 5-ந் தேதி நடக்கிறது
    X

    முதல் முறையாக சென்னையில் ஜல்லிக்கட்டு: மார்ச் 5-ந் தேதி நடக்கிறது

    • தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள்.
    • ஜல்லிக்கட்டை 10 ஆயிரம் பேர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆலந்தூர்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் இடையில் தடை ஏற்பட்ட நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையால் தற்போது தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் தான் நினைவுக்கு வரும். இதுதவிர சில கிராமங்களிலும் நடத்தப்படுகிறது.

    ஆனால் தலைநகர் சென்னையில் நடத்தப்படவே இல்லை. ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற காரணமாக அமைந்ததே தலைநகர் சென்னையில் உள்ள மெரினாவில் நடந்த தன்னெழுச்சி போராட்டம்தான். எனவே சென்னையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.

    அதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற மார்ச் மாதம் 5-ந்தேதி சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.

    இதுதொடர்பாக தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடத்த உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் பெயரில் ஒரு காளை உள்பட சிறந்த 501 காளைகள் இடம் பெற உள்ளன.

    தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள். மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. போட்டியில் முதல் இடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    ஜல்லிக்கட்டை 10 ஆயிரம் பேர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே இதற்கான பணிகள் தொடங்கி விட்டது. இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க தலைவர் ராஜேஷ், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், முன்னாள் கவுன்சிலர் பி.குணாளன் ஆகியோர் இருந்தனர்.

    Next Story
    ×