search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு வழக்கு: திருச்சியில் 2-வது நாளாக குஜராத் தடயவியல் குழு ஆய்வு
    X

    கொடநாடு வழக்கு: திருச்சியில் 2-வது நாளாக குஜராத் தடயவியல் குழு ஆய்வு

    • 2017-ம் ஆண்டு சந்தேகப்படும்படியாக கிடைத்த 60 செல்போன் எண்கள் 19 செல்போன் டவர்களில் இருந்து பதிவான தகவல்களை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
    • குஜராத் மாநிலத்தில் உள்ள தடயவியல் பல்கலைக்கழகத்திலிருந்து 2 தடயவியல் நிபுணர்கள் மிஸ்ப்ரி, ஜாலா ஆகியோர் திருச்சி வந்தனர்.

    திருச்சி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017 ஆண்டு மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 11 பேரை கைது செய்தனர். இதில் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார். அதைத் தொடர்ந்து வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விசாரணையில் பல்வேறு தகவல்களை சேகரித்தனர். அந்த வகையில் கொள்ளை சம்பவம் நடந்தபோது சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன்களிலிருந்து யார்? யாரை தொடர்பு கொண்டார்கள் என்கிற விவரங்களை போலீசார் சேகரிக்க முடிவு செய்தனர்.

    2017-ம் ஆண்டு சந்தேகப்படும்படியாக கிடைத்த 60 செல்போன் எண்கள் 19 செல்போன் டவர்களில் இருந்து பதிவான தகவல்களை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த தகவல்கள் அனைத்தும் திருச்சி பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் தான் பதிவாகும். ஆகவே பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை போலீசார் நாடினர். ஆனால் செல்போன் அழைப்புகள் குறித்த விவரங்களை 2 ஆண்டுகள் மட்டுமே பாதுகாக்கும் வசதி உள்ளதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

    அதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழக உதவியை நாடினர்.

    அந்த வகையில் நிபுணர் குழு நேற்று திருச்சி சிங்காரத் தோப்பில் உள்ள பி.எஸ்.என்.எல். தென் மண்டல மைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள தடயவியல் பல்கலைக்கழகத்திலிருந்து 2 தடயவியல் நிபுணர்கள் மிஸ்ப்ரி, ஜாலா ஆகியோர் திருச்சி வந்தனர். பின்னர் அவர்கள் திருச்சி சிங்காரத்தோப்பு பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு நேரில் சென்று கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று பதிவாகியிருந்த செல்போன் மற்றும் தொலைபேசி டவர்களின் தகவல்களை சேகரிக்க தொடங்கினர்.

    இதில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு மாதவன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஈடுபட்டது. பின்னர் அவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலக 2-ம் தளத்தில் உள்ள சர்வரில் பதிவான ஆடியோ பதிவுகள் மற்றும் விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு பல மணி நேரம் நீடித்தது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வுகள் தொடர இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×