search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிருஷ்ண ஜெயந்தி விழா- நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்
    X

    கிருஷ்ண ஜெயந்தி விழா- நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

    • மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9-வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த அவதாரம் சிறப்புக்குரியது.
    • சென்னையில் பல இடங்களில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்திருந்தது.

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கிருஷ்ணர் சிலைகள், பூஜைக்குரிய பொருட்கள் அமோகமாக விற்பனையானது.

    இந்துக்களின் காக்கும் கடவுளாக கருதப்படும் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9-வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த அவதாரம் சிறப்புக்குரியது. தாய்மை, அன்பு, பாசம், காதல் உணர்வுகளை தாங்கி, அன்பு ஒன்றே நிலையானது என்பதை வையகத்துக்கு உணர்த்தும் அவதாரமாகும்.

    கிருஷ்ணரை தங்கள் வீட்டு குழந்தையாக பாவித்து மக்கள் அனைவரும் ஒருமித்து தங்கள் இல்லங்களில் கொண்டாடும் அற்புதமான நிகழ்வு. அத்தகைய சிறப்புக்குரிய கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் பல இடங்களில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனையாகி வருகிறது. குழந்தை கிருஷ்ணர், ராதையுடன் இருக்கும் கிருஷ்ணர், நண்பர்களுடன் விளையாடும் கிருஷ்ணர், வெண்ணெய் உண்ட கிருஷ்ணர், கோபியர்களுடன் இருக்கும் கிருஷ்ணர், தவிழும் கிருஷ்ணர் என்று பல விதமான உருவங்களில் சிறிய, பெரிய கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு உள்ளது.

    சென்னை புரசைவாக்கம், மயிலாப்பூர், தியாகராயநகர், பாரிமுனை, மூலக்கடை, பெரம்பூர், அண்ணாநகர், கோயம்பேடு, பூந்தமல்லி மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு உள்ளது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சிறிய கிருஷ்ணர் சிலைகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கி சென்ற காட்சிகளை பார்க்க முடிந்தது. இது தவிர பழங்கள், பூக்கள் விற்பனையும் அமோகமாக இருந்தது.

    தோரணம், மாவிலை மற்றும் பூஜைக்குரிய பொருட்களை ஏராளமானவர்கள் கடை வீதிக்கு வந்து வாங்கி சென்றனர்.

    கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட இருக்கிறது. இன்று காலை 9.15 மணி முதல் மறுநாள் காலை 7.30 வரை அஷ்டமி திதி இருக்கிறது. எனவே கோகுலாஷ்டமி வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    சென்னை இ.சி.ஆரில் உள்ள இஸ்கான் கோவிலில் கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மகா அபிஷேகமும், பல்வேறு பக்தி நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 27-ந்தேதி (நாளை) கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.

    கோவில்களை தாண்டி வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. தங்கள் குழந்தையை கிருஷ்ணராக பாவித்து பாதங்களில் மாவிட்டு, நடக்க வைத்து பாதங்களை பதிவு செய்து மகிழ்வார்கள்.

    Next Story
    ×