search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறை உணவகத்தில் கைப்பையை தவறவிட்ட சுற்றுலா பயணி - உரியவரிடம் ஒப்படைத்த சிறைவாசிக்கு பாராட்டு
    X

    சிறை உணவகத்தில் கைப்பையை தவறவிட்ட சுற்றுலா பயணி - உரியவரிடம் ஒப்படைத்த சிறைவாசிக்கு பாராட்டு

    • மத்திய சிறை சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தினமும் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர்.
    • மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா ஆகியோர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.

    மதுரை:

    பல்வேறு குற்றங்கள் புரிந்து நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு சிறைக்கு வரும் கைதிகளின் மறுவாழ்வுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதில் சிறைவாசிகளின் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய சிறை கண்காணிப்பில் உள்ள பெட்ரோல் நிலையம், சிறைச்சந்தை ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய சிறை சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தினமும் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக சிறைச் சந்தை காணப்படும். இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா ஆகியோர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.

    மதுரையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட்டு பின் மத்திய சிறையில் செயல்பட்டுவரும் சிறை சந்தையை பார்வையிட்டனர். அதன் பின் அங்கு காலை உணவு அருந்திவிட்டு சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகு அவர்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜையின் அருகே ஒரு கைப்பை இருந்தது. அதைக்கண்ட சிறை சந்தையில் பணிபுரியும் தண்டனை சிறைவாசி கார்த்திக் அந்த கைப்பையை எடுத்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    அதில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. அதில் அவர்களுடைய ஆதார் தவிர தொடர்பு எண்கள் இல்லாததால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து சிறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே தனது கைப்பையை எங்கு தவறவிட்டோம் என்று தெரியாமல் பல்வேறு இடங்களுக்கு சென்ற சிம்டா சீனிவாஸ் கடைசியாக மதுரை மத்திய சிறை சந்தைக்கு வந்தனர். அவர்களிம் உரிய விசாரணைக்கு பிறகு மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கைப்பை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதனை பெற்றுக் கொண்ட சுற்றுலாவாசிகள் மற்றும் சிறை அதிகாரிகள் சிறைவாசி கார்த்திக்கின் நேர்மையை பாராட்டினர். உரியவரிடம் ஒப்படைத்த காட்சி.

    Next Story
    ×