search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தொடர்ந்து தாமதம்
    X

    வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தொடர்ந்து தாமதம்

    • கல்லணை கீழணை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு செல்லும்.
    • மதகுகள் புனரமைக்கும் பணி நிறைவடைய இன்னும் 10 நாட்கள் ஆகும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட விவசாயத்துக்கும், பொதுமக்களின் குடிநீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்கி வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காவிரி ஆற்றின் வழியாக திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வருகிறது. இங்கு வரும் தண்ணீர் உடனுக்குடன் காவிரி அல்லது கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும்.

    அந்த வகையில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மேட்டூர் அணையிலிருந்து சமீபத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு மேலணைக்கு இன்று காலை 6 மணி நிலவரபடி காவிரியில் வினாடிக்கு 1600 கன அடி நீர் வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டு, கல்லணை கீழணை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு செல்லும்.

    முக்கொம்பு காவிரி மேலணை பகுதியில் உள்ள ஷட்டர்கள் புனரமைக்கும் பணிகள் நடப்பதால் வேறு வழி இல்லாமல் காவிரியில் வரும் முழுமையான நீரும் காவிரி ஆற்றிலேயே செல்கிறது. முன்பு 500 கன அடி நீர் வந்தபோது பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2 மதகுகளை அடைத்து தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில் இலகுவாக திருப்பி விட்டனர்.

    இப்போது 1600 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் பரந்து விரிந்து அனைத்து மதகுகளையும் தொட்டபடி வருகிறது. இந்த மதகுகள் புனரமைக்கும் பணி நிறைவடைய இன்னும் 10 நாட்கள் ஆகும். அதுவரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திருப்பி விடுவது தடைபடும் என்ற காரணத்தினால் தற்போது காவிரி ஆற்றில் 2 ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் கரை அமைக்கும் பணிகள் கடந்த 2 நாட்களாக இரவு பகலாக நடந்து வருகிறது.

    இது தொடர்பாக முக்கொம்பு மேலணை அதிகாரி ஒருவர் கூறும்போது, மணல் ஈரமாக இருக்கும் காரணத்தினால் மணல் கரை அமைக்கும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இந்த கரை முழுமையாக அமைக்கப்பட்டு காவிரியில் வரும் தண்ணீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டு கல்லணை வழியாக வீராணம் ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×