search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னமராவதியில் சோகம்- மஞ்சுவிரட்டில் காளை முட்டி தொழிலாளி உயிரிழப்பு
    X

    பொன்னமராவதியில் சோகம்- மஞ்சுவிரட்டில் காளை முட்டி தொழிலாளி உயிரிழப்பு

    • கூலி தொழிலாளியான சிங்கராவணன் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி என்ற கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. ஏகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இங்கு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

    அந்தவகையில் இந்தாண்டு இன்று காலை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் மஞ்சுவிரட்டு போட்டியில் உற்சாகமாக பங்கேற்றிருந்தன.

    வழக்கம் போல் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்ததை ஆரவாரம் செய்து ஏராளமானோர் ரசித்துக்கொண்டிருந்தனர்.

    இதனிடையே இதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிங்கராவணன் (வயது42) என்பவர் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடி வந்த காளை அவரை முட்டி தள்ளியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மஞ்சுவிரட்டு போட்டி என்பது ஜல்லிக்கட்டு போன்று இல்லாமல் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விடுவது போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×