search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீனாட்சி அம்மன் கோவில் ஆலய பிரவேசம் நிகழ்ந்து 85 ஆண்டுகள் நிறைவு-உரிமைகளை மீட்டெடுத்த தினம் இன்று
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1939-ம் ஆண்டு நடைபெற்ற ஆலய பிரவேசம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை காணலாம். (உள்படம்)

    மீனாட்சி அம்மன் கோவில் ஆலய பிரவேசம் நிகழ்ந்து 85 ஆண்டுகள் நிறைவு-உரிமைகளை மீட்டெடுத்த தினம் இன்று

    • மீனாட்சி அம்மன் கோவில் ஆலய பிரவேசத்தை நடத்த பிள்ளையார் சுழி போட்டது வைத்தியநாத அய்யர்.
    • கோவில் அறங்காவலராக இருந்த எஸ்.ஆர்.நாயுடு மிக உறுதுணையாக இருந்தார்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி அறியாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அன்னை மீனாட்சி அருள்பாலிக்கும் ஆன்மீக ஸ்தலமாகவும், தமிழர்களின் கலையை பறைசாற்றும் வானுயர்ந்த கோபுரங்களும், ஆச்சரியம் அளிக்கும் சிற்பங்களும் கொண்டதாக இக்கோவில் பெருமையுடன் விளங்கி வருகிறது.

    பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்குள் சென்று இறைவனையும், இறைவியையும் தரிசிக்க இன்று எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்கலாம்.

    ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. சமூகத்திலும் பொருளாதாரத்திலும் தாழ்ந்த பல சமூகத்தினர் கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அந்த சமூகத்தினர் மீனாட்சி அம்மன் கோவில் கோபுர நுழைவாயில் முன்பு சூடம் ஏற்றி வெளியே நின்றுவாறு சாமி கும்பிட்டு செல்லும் நிலை இருந்தது. அனைவருக்கும் சமமான கடவுளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் வழிபடுவதற்கு பல்வேறு காலகட்டங்களில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் 1938-ம் ஆண்டு வரை மீனாட்சி அம்மன் கோவிலில் மற்ற சமூகத்தினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

    1939-ம் இந்திய சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்திருந்த வேளையில் மதுரையிலும் அதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

    அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து சுதந்திரத்திற்காக வீதிக்கு வந்து போராடி வந்த அந்த வேளையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல மட்டும் பாகுபாடு காட்டுவது உறுத்தலாகவே இருந்தது.

    சுதந்திரம் அடைவதற்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவிலில் நிலவும் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி மீனாட்சி அம்மன் கோவில் ஆலய பிரவேசத்தை நடத்த பிள்ளையார் சுழி போட்டது வைத்தியநாத அய்யர்.

    சுதந்திரப் போராட்ட தியாகி, வழக்கறிஞர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்ட இவர், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நடைபெறும் சமூக தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார்.

    இதையடுத்து அவர் முத்துராமலிங்க தேவர், என்.எம்.ஆர்.சுப்புராமன் உள்ளிட்டவர்களை சந்தித்து ஆலய பிரவேசம் குறித்து எடுத்துக் கூறினார். இதற்கான ஆலோசனை கூட்டமும் நடந்தது. வைத்தியநாத அய்யர் நடத்தும் ஆலய பிரவேசத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

    கோவில் அறங்காவலராக இருந்த எஸ்.ஆர்.நாயுடு மிக உறுதுணையாக இருந்தார். கோவில் பட்டர்களின் எதிர்ப்புகளையும் மீறி ஆலய பிரதேசத்துக்கு ஆதரவு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து 1939-ம் ஆண்டு ஜூலை 8-ந் தேதி இரவு 8 மணி அளவில் வைத்தியநாத அய்யர் தலைமையில் கக்கன், (முன்னாள் அமைச்சர்) முருகானந்தம், சின்னையா, பூவலிங்கம், சண்முகம் உள்ளிட்ட 6 பேர் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று கருவறையில் அம்மனை வழிபட்டனர். சாமி கும்பிட்டு வெளியே வந்த வைத்தியநாத அய்யர் பொதுமக்கள் மத்தியில் ஆலய பிரவேசம் நடைபெற்றதாக அறிவித்தார்.

    இந்த தகவல் மதுரை முழுக்க காட்டுத்தீ போல் பரவியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து சமுதாய மக்களும் சென்று சாமி கும்பிட்டனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலய பிரவேசம் நடந்து இன்றுடன் 85 ஆண்டு கள் நிறைவடைந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. அதற்கு பலர் பல்வேறு எதிர்ப்புகளை மீறி போராட்டங்களை நடத்தி உரிமையை மீட்டெடுத்துள்ளனர். இதற்கு சாட்சியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்களும் பெருமையுடன் கம்பீரமாக வானுயர்ந்து நிற்கிறது என்றால் மிகையாகாது.

    Next Story
    ×