search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை நீர்மட்டம் 40 அடியை தாண்டியது
    X

    ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டிய காட்சி.

    மேட்டூர் அணை நீர்மட்டம் 40 அடியை தாண்டியது

    • கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும்.
    • ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

    கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 8,425 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 102.80 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 562 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 81.89 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 4,711 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணையில் இருந்து விநாடிக்கு 2,292 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் 2,859 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது. இங்கு நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் நடைபாதை, மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை, தொங்குப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தும், காவிரி ஆறு, மெயின் அருவி, சினிபால்ஸ உள்ளிட்ட இடங்களில் குளித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

    இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,465 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,832 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து சிறிது குறைந்து 2,149 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 39.76 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 40.05 அடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.22 அடி உயர்ந்தது. அணையில் 12.20 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    இனிவரும் காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் மளமளவென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×