search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூர் பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    பஸ் விபத்தில் காயம் அடைந்து குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறி நிவாரண நிதி வழங்கிய காட்சி.

    குன்னூர் பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் நேராக விபத்து நடந்த மரப்பாலம் பகுதிக்கு சென்றனர்.
    • லேசான காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 32 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் காசோலைகளை வழங்கினார்.

    அருவங்காடு:

    தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்தவர்களின் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார்.

    பின்னர் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் நேராக விபத்து நடந்த மரப்பாலம் பகுதிக்கு சென்றனர். அங்கு விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அவர், அங்கு நடந்து வரும் மீட்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் சுற்றுலா பயணிகளை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    லேசான காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 32 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் காசோலைகளை வழங்கினார்.

    மேலும் இறந்த 9 பேரின் உடலுக்கும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து சுற்றுலாவுக்கு புறப்பட்ட இவர்கள் கேரள மாநிலம் கொச்சின் சென்று விட்டு, ஊட்டிக்கு வந்துள்ளனர்.

    அங்கிருந்து கோவைக்கு திரும்பியபோது தான் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

    அதன்படி இன்று படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

    இறந்த 9 பேரின் உடல்களும் உடற்கூராய்வுக்கு பிறகு அரசு செலவில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இறந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சத்திற்கான காசோலை அவர்களது உறவினர்களிடம் சொந்த ஊரில் வைத்து வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர், மாவட்ட கலெக்டர் அருணா மற்றும் பலர் உள்ளனர்.

    Next Story
    ×