search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3 மாநில ஆளுநர்களுக்கு இடையே மறைமுக போட்டி- அமைச்சர் ரகுபதி பதிலடி
    X

    3 மாநில ஆளுநர்களுக்கு இடையே மறைமுக போட்டி- அமைச்சர் ரகுபதி பதிலடி

    • பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.
    • எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

    கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் அவர், மூவரும் ஆளுநர் என்பதையே மறந்து, பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை பற்றி ஆளுநர் விமர்சித்துள்ளார். அரசு திட்டத்தில் விளக்கம் தேவைப்பட்டால் அது குறித்து கேட்டறியலாம்.

    அதைவிட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா?" என்றார்.

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார்.

    அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பது போலத் தெரிகிறது.

    மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.

    நேற்றைய தினம் நாகப்பட்டினம் சென்ற ஆளுநர், அதன்பிறகு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தைப் பற்றி விமர்சித்துள்ளார். வீடுகள் சரியில்லை என்றும் இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அக்கறையின்மை என்றும், ஊழல் என்றும் வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

    அரசு திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அதுகுறித்துக் கேட்டறியலாம். அதை விட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா?

    எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் என்று கூறுகின்றார்? வாய்க்கு வந்ததைப் பேசிடவும் எழுதிடவும் அவர் அட்ரஸ் இல்லாத ஆள் அல்லவே?

    கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார் ஆளுநர். குடிசைகளுக்கு மத்தியில் கான்கிரீட் கட்டுமானம் கட்டி இருக்கிறார்களாம். இது தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமாம்.

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிலப்பிரபுத்துவ - ஜாதியவாத சக்திகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் எழுப்பட்ட நினைவுச் சின்னம் அது.

    அத்தகைய கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட தியாகிகளைப் போற்றும் வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தச் சின்னத்தை அமைத்துள்ளது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? சுற்றிலும் இருக்கிற குடிசைகளை அகற்றச் சொல்கிறாரா?

    அயோத்தியில் இப்போது ஆயிரம் கோடியில் கோயில் கட்டி இருக்கிறார்கள். அயோத்தி நகர் இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு முறை அங்கு போய் பார்த்துவிட்டு திரும்பட்டுமே. உலகத் தலைவர்கள் வரும்போது குஜராத் மாநிலத்து ஏழைகளின் வாழ்விடங்களை பச்சை 'ஸ்கிரீன்' போட்டு மறைத்ததை இந்த நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.

    எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி.

    'தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது, தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார் ஆளுநர். வரலாற்றில் காலம் காலமாக இருக்கும் பெயரை மாற்றும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது என்று சொன்னதும், அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் ஆளுநர்.

    சில நாட்களுக்கு முன்னால், 'மகாத்மா காந்தியால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை' என்றார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், ' நான் அப்படிச் சொல்லவில்லை' என்று சொல்லி விட்டார்.

    தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாட்டின் நன்மைக்காக இதுவரை ஏதாவது செய்துள்ளாரா என்றால் இல்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசிடம் இருந்து ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறாரா என்றால் இல்லை.

    குடும்ப வேலையாக அடிக்கடி டெல்லி செல்லும் அவர், தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைக்காக எப்போதாவது டெல்லி சென்றுள்ளாரா என்றால் இல்லை. அவர்தான், சொந்தமாக எந்த நன்மையும் செய்யவில்லை.

    நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் உதவியாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. இடைஞ்சலாகவும், மாநிலத்துக்கு அதிக கெடுதல் செய்பவராகவும், கெடுதல் நினைப்பவராகவும் இருக்கிறார் ஆளுநர்.

    ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதாவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது முதல், ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளில் சிக்கி கைதான சேலம் பல்கலைக் கழக துணைவேந்தரைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் வரை ஆளுநரின் அனைத்து நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாகவும் அமைந்துள்ளன.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப் பட்ட சட்டமுன்வடிவுகளையும், உத்தரவுகளையும், கோப்புகளையும் பல மாத காலமாக ஊறுகாய்ப் பானையில் ஊற வைப்பதைப் போல கிண்டி மாளிகையில் ஊற வைத்துக் கொண்டு இருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம்.

    "ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அவர் பெயரளவில்தான் மாநிலத்தின் தலைவராக இருக்கிறார். ஆளுநர் என்பவருக்கு அரசியல் சட்டப்படி சில அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன.

    அந்த அதிகாரங்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகள் சட்டமியற்றும் வழக்கமான பணிகளை முறியடித்துவிட முடியாது" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியாகத் தெரிவித்தார்கள். அதன்பிறகும் ஏதோ அதிகாரம் பொருந்தியவராக, தன்னை மன்னரைப் போல நினைத்துக் கொண்டு ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார்.

    ஆளுநராக இருந்து அரசியல் செய்வதை விடுத்து, நேரடியாக அவர் அரசியல் களத்துக்கு வரலாம். அவரது அந்த ஆசைக்கு அகில இந்திய பா.ஜ.க தலைமை அனுமதி அளித்தால், 'அவருக்கும் நல்லது தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது' என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×