search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Shobha Karandlaje
    X

    குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேச்சு- மன்னிப்பு கோரினார் அமைச்சர் ஷோபா

    • தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • தனது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஷோபா கோரிக்கை விடுத்துள்ளார்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்களுக்கு தொடர்பு உள்ளது என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்பு கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷோபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டதாகவும் வாதிட்டார்.

    தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக் கொள்ளப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தெரிவித்தார்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் ஷோபா சார்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், தனது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×