search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது- அமைச்சர் தங்கம் தென்னரசு
    X

    எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது- அமைச்சர் தங்கம் தென்னரசு

    • அதிமுக ஆட்சியைப் போல் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை.
    • ஓட்டு போடாதவர்கள் வருத்தப்படும் அளவிற்கு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை விமர்சிப்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்தார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு மேலும் கூறியதாவது:-

    2011 டிசம்பரில் 'தானே' புயல் கடலூரை சூறையாடிய போது அதிமுகவினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர்.

    2015ல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து சென்னையை மூழ்கடித்தார்கள்.

    2017ல் கன்னியாகுமரியை நிலைகுலைய வைத்த 'ஒக்கி' புயலின் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரையில் அமைச்சர்கள் இருந்தனர்.

    2018ல் 'கஜா' புயல் டெல்டா பகுதியை தாக்கிய போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தார்.

    ஆனால், இப்போது புயல் வீசியதில் இருந்து இந்த நொடி வரைக்கும் அமைச்சர்கள் நாங்கள் களத்தில் உள்ளோம்.

    அதிமுக ஆட்சியைப் போல் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை.

    டெல்லியில் உள்ள தலைவர்களை போல் மணி அடியுங்கள், தட்டை தட்டுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக கொரோனா காலத்தில் திமுக அரசு செயல்பட்டது.

    செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு, உபரி நீர் திறப்பை முன்கூட்டியே கணித்து சரிவர கையாண்டோம். அதனால், பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.

    யாருக்கு உதவி தேவையோ, அவர்களுக்கு உடனுக்குடன் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.

    கடந்த 2015ம் ஆண்டின் வெள்ளத்தின்போது 10,780 கோடி நிவாரண தொகையாக மத்திய அரசிடம் அதிமுக கேட்டிருந்தது.

    தற்போது 5 ஆயிரம் கோடி மட்டுமே நிவாரணம் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

    சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் புயல் நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழையால் பாதிக்கப்பட்ட வட்டங்களில் நிவாரண நிதியாக ரூ.6,000 வழங்கப்படும்.

    ஓட்டு போடாதவர்கள் ஏன் நமக்கு வாக்களிக்கவில்லை என வருத்தப்படும் அளவிற்கு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    அரசு தரப்பில் எந்த ஒரு விவரங்களும் மூடி மறைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்வோக்கம் கொண்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×