search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விவசாயம் விரும்பும் அனைவரும் பார்க்கும் தொழிலாக மாற்ற நடவடிக்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    விவசாயம் விரும்பும் அனைவரும் பார்க்கும் தொழிலாக மாற்ற நடவடிக்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • பழங்கள், காய்கனிகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பார்ப்பது என்பது கண்கொள்ளாகாட்சியாக அமைந்துள்ளது.
    • மண்ணும் ஈரமானது. உழவர்களது உள்ளமும் ஈரமானது. மண்ணும் மக்களும் வாழ்ந்தார்கள் மகிழ்ந்தார்கள்.

    திருச்சி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று 3 நாள் வேளாண் சங்கமம்-2023 விழாவை தொடங்கிவைத்து கண்காட்சிகளை பார்வையிட்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் மற்றும் விருதுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    மிக மிக பசுமையான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடை கிறேன். இதற்கு காரணம் இப்பொழுது மனமும் பசுமையாகி உள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சியை பார்வையிட்டபோது இன்றைக்கு நான் பெற்ற உணர்வை அன்றைக்கு நான் பெற்றேன்.

    பழங்கள், காய்கனிகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பார்ப்பது என்பது கண்கொள்ளாகாட்சியாக அமைந்துள்ளது.

    அந்த உணர்வை எனக்கு ஏற்படுத்தி தந்திருக்க கூடிய அந்த பெரும் வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்திருக்க கூடிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு முதலில் என்னுடைய நன்றியை காணிக்கையாக்க விரும்புகிறேன்.

    நம்முடைய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரைக்கும் அவரை வேங்கையின் மைந்தன் என்று நாங்கள் அரசியல் மேடைகளில் சொல்வது உண்டு. ஆனால் வேளாண் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்ற பிறகு அவர் ஆற்றும் பணிகளை பார்க்கும்போது அவர் உழவர் மகனாகவே இப்பொழுது மாறி இருக்கிறதை பார்க்க முடிகிறது.

    வேளாண் துறையை தலைசிறந்த துறையில் ஒன்றாக அவர் மாற்றி இருக்கிறார். கழக ஆட்சி அமைந்ததற்கு பிறகு அனைத்து துறைகளும் ஒருசேர வளர வேண்டும் என்று நாங்கள் உழைத்து வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள்.

    மிக சிறப்பான வளர்ச்சியை மற்ற துறைகளை போல வேளாண் துறையை நினைத்த உடனே வளர்த்து விட முடியாது. மற்ற துறைகளை வளர்க்க நிதி வளம் இருந்தால் போதும். ஆனால் வேளாண் துறை வளர்க்க நிதித்துறை மட்டும் அல்ல நீர் வளமும் வேண்டும்.

    அது காலத்தில் கிடைக்க வேண்டும். நீர் வளமும் கை கொடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு தேவையான இடுப்பொருட்களை வேளாண் துறை குறித்த காலத்தில் தேவையான அளவு வழங்கியதால் உற்பத்தி பெருகியது. உற்பத்தி பரப்பும் அதிகமானது.

    மண்ணும் ஈரமானது. உழவர்களது உள்ளமும் ஈரமானது. மண்ணும் மக்களும் வாழ்ந்தார்கள் மகிழ்ந்தார்கள். நம்மால் இன்றைக்கு பெருமையோடு சொல்ல முடியும்.

    தி.மு.க. அரசு அமைந்ததும் வேளாண்மை துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு புதிய திட்டங்களை நாம் தொடங்கி இருக்கிறோம்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், வேளாண் நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம், நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மண்வள மேலாண்மை ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வரிசையில் தான் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. நமது அரசு பொறுப்பேற்று செயல்படுத்திய திட்டங்களினால் 6 ஆண்டுகளுக்கு பிறகு 2021-2022-ம் ஆண்டு 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக்டன் அளவில் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு சாதனையை நாம் படைத்திருக்கிறோம்.

    குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக கடந்த 2021-ம் ஆண்டில் மேட்டூர் அணையை உரிய தேதிக்கு முன்னரே திறந்த காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 36,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையை நாம் எட்டி இருக்கிறோம்.

    தமிழ் மண்வளம் என்ற இணையதளத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். விவசாயிகளுக்கு மிகுந்த பயனளித்து வரும் உழவன் செயலி பயன்பாட்டில் உள்ளது.

    இந்தியாவிலேயே முதன் மாநிலமாக நமது அரசு நலத்திட்டங்கள் சரியான பயணிகளை பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்திட உழவர்கள் அனைத்து விவரங்களை உள்ளடக்கிய வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கூடுதலாக சன்னரக நெல்லுக்கு ரூ.100-ம், இதர ரகங்களுக்கு 75 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு நெல் கொள்முதலில் ரூ.376 கோடியே 63 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு அறிவித்த ஆதார விலையிலிருந்து டன் ஒன்றுக்கு தமிழக அரசு ரூ.195 சிறப்பு ஊக்கத்துறையாக வழங்கி வருகிறது.

    தி.மு.க. அரசு அமைந்ததற்கு பிறகு முதலில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தோம். பின்னர் கூடுதலாக 50,000 மின் இணைப்புகளை கொடுத்தோம். இப்போது மேலும் 50,000 மின் இணைப்புகளை வழங்குகிறோம்.

    ஆனால் 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கியுள்ளது.

    உழவர்களுக்கு இலவச மின்சார வழங்கும் திட்டத்தை 1990-ம் ஆண்டு தொடங்கி வைத்தவர் அன்றைக்கு முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர்.

    இந்த 30 ஆண்டு காலத்திலும் எல்லா காலத்திலும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து தமிழ்நாட்டு வேளாண் பெருங்குடி மக்கள் வளம் பெற தலைவர் கலைஞர் தான் அன்றும் இன்றும் காரண கர்த்தராக அமைந்திருக்கிறார்.

    வேளாண் துறையானது அதிகமான அளவுக்கு வளர்ந்து வருகிறது என்று அடையாளமாகவும் இது போன்ற கண்காட்சிகளை மூலமாக நாம் சொல்லலாம். நவீன தொழில்நுட்பங்கள் புதிய ரகங்கள் வேளாண்மை இயந்திரங்கள் மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்கள் ஏராளமாக வந்து கொண்டே இருக்கின்றன.

    இதனை பொதுமக்களுக்கும், விவசாயிகளும் அறிந்து கொள்ள இதுபோன்ற கண்காட்சிகள் அவசியமாகின்றன.

    விவசாயம் என்பது விரும்பும் அனைவரும் பார்க்கும் தொழிலாக மாற வேண்டும். நிலத்தை மதிப்புக்குறியது எதுவும் இல்லை.

    அந்த நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். உழவர்களுக்கு தொழில் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும்.

    இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால் வேளாண்மை வர்த்தக தொழிலாக மாறும். இதுபோன்ற கண்காட்சிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

    இந்த ஆண்டு விவசாயிகள் சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான இறுதி நாளை ஆகஸ்ட் மாதம் வரை நீடித்து தர வேண்டும் என என்னிடம் நேற்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 15-ந் தேதி வரை சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான தேதி நீடிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×