search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னை ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்கள் யார்?  போலீசார் விசாரணை
    X

    சென்னை ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்கள் யார்? போலீசார் விசாரணை

    • தண்டவாளத்தின் நடுவில் சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.
    • ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை 6.25 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

    பாம்புச்சந்தை ரெயில் நிலையத்திற்கும், சங்கரன்கோவில் ரெயில் நிலையத்திற்கும் இடையே சங்கனாப்பேரி பகுதியில் மாலை 6.50 மணிக்கு ரெயில் வந்தபோது, தண்டவாளத்தின் நடுவில் சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.

    உடனடியாக சாமர்த்தியமாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் அந்த கல்லை அகற்றிவிட்டு சுமார் 20 நிமிடம் தாமதமாக ரெயில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நெல்லை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்தனர்.

    தொடர்ந்து தண்டவாளங்களை ஆய்வு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதா, என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பாறாங்கல்லை வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து இன்று 2-வது நாளாக ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சம்பவம் நடந்த நாளன்று அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் வாகனங்கள் வந்துள்ளதா? அங்கு திட்டமிட்டு ஏதேனும் கும்பல் வந்ததா? அல்லது குடிபோதையில் யாரேனும் இந்த செயலை செய்தார்களா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×