search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் 6 மணி நேரம் விசாரணை
    X

    ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் 6 மணி நேரம் விசாரணை

    • ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசியவை உள்ளிட்டவற்றை விளக்கமாக எழுதி ஒப்படைத்தனர்.
    • முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு தேவையான ஆவண பணிகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கை கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நேற்று பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின், மகள் கேத்தரின் ஆகியோர் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வருமாறு அழைக்கப்பட்டு இருந்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் மதியம் ஒரு காரில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது கேத்தரின் கை குழந்தையுடன் விசாரணைக்கு வந்திருந்தார். பின்னர் அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நேரடி விசாரணை நடத்தினார்.

    அதன்பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் ஆகியோர் முன்னிலையில் அவர்களது குடும்பத்தினர் சம்பவத் தன்று நடந்த நிகழ்வுகள், ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசியவை உள்ளிட்டவற்றை விளக்கமாக எழுதி ஒப்படைத்தனர்.

    இந்த விசாரணையானது மாலை 6.45 மணி வரை அதாவது சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது. அதன்பின்னர் ஜெயக்குமார் குடும்பத்தினர் காரில் ஏறி ஊருக்கு புறப்பட்டனர். தொடர்ந்து இன்று ஒரு குழு கரைசுத்து புதூருக்கு சென்று ஜெயக்குமாரின் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர். மற்றொரு குழு ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு தேவையான ஆவண பணிகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×