search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நிபா வைரஸ்-குரங்கம்மை: தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை
    X

    நிபா வைரஸ்-குரங்கம்மை: 'தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை'

    • கேரளாவில் இருந்து வாகனங்களில் வரக்கூடியவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழக எல்லை பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம்.

    களியக்காவிளை:

    கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பரவியுள்ளது. இதனால் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கேரள மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

    கேரளாவில் நிபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருப்பதையடுத்து, மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் தமிழக சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தொடங்கியுள்ளனர்.

    குமரி மாவட்டத்தை பொருத்தவரை கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் வரக்கூடியவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் களியக்காவிளை சோதனை சாவடியில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம், குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் காய்ச்சல் பரிசோதனை பணி உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.

    அது தொடர்பாக குமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீனாட்சியிடம் கேட்டறிந்தனர். பின்பு பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


    களியக்காவிளை சோதனைச்சாவடியில் குரங்கம்மை மற்றும் நிபா வைரஸ் பாதிப்பு ஆகிய இரண்டு காரணங்களுக்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. நிபா வைரசை பொருத்தமட்டில் பழம் தின்னி வவ்வால்கள் மூலமாக பரவ வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு வந்து விட்டால் மற்றவர்களுக்கும் பரவுகிறது.

    குரங்கம்மையை பொருத்தமட்டில் ஆப்பிரிக்கன் நாடுகளில் உள்ளது. பெரியவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கம்மை நோய்பாதிப்பை ஆய்வு செய்ய சென்னை கிண்டியில் ஆய்வகம் உள்ளது. நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் புனேக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. தமிழக எல்லை பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். அதுமட்டு மின்றி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? எங்கிருந்து சிகிச்சைக்கு வந்துள்ளார்கள்? என்பது குறித்த விவரங்களை கண்காணித்து வருகிறோம்.

    பொதுமக்களுக்கு தங்களது பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உடனடியாக சோதனை செய்து கொள்ள வேண்டும். நமக்கு மருந்து மாத்திரைகள் அனைத்தும் போதுமான அளவு உள்ளது. குரங்கம்மையை பொருத்த மட்டில் 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 10 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    நிபா வைரசுக்கு சிகிச்சையளிக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனியாக வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதுடன் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளது. பொதுமக்களே காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று வருகிறார்கள். சோதனை சாவடியில் கடந்த மூன்று நாட்களில் பார்க்கும் போது 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    காய்ச்சல் இருந்தால் யாரும் பயணம் செய்யக் கூடாது என்று விழிப்புணர்வு மக்களிடம் உள்ளது. எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் 3 ஷிப்டுகளாக போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×