search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    வடகிழக்கு பருவமழை- தீபாவளியன்று மழை இருக்குமா?
    X

    வடகிழக்கு பருவமழை- தீபாவளியன்று மழை இருக்குமா?

    • வருகிற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • பொதுவாக ஒரு புயல் கரையை கடந்தால் அடுத்த நிகழ்வு உருவாக ஒரு வார காலம் எடுக்கும்.

    வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தீபாவளி பண்டிகை வரும். அந்த வகையில் தீபாவளி பண்டிகையின்போது மழைக்கான வாய்ப்பும் அதிகளவில் இருக்கும். இதனால் பண்டிகை கொண்டாட்டம் களையிழந்து காணப்படும். அந்த வகையில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், வருகிற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    அந்த நாளில் மழை இருக்குமா? என்ற கேள்வி, தீபாவளி பண்டிகை வியாபாரத்தை நம்பி இருக்கும் பலருக்கு இருக்கும். அவர்களுக்கு தீபாவளியன்றும், அதற்கு முந்தைய நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்ற ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது.

    காரணம், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 21-ந்தேதி உருவாகும், தாழ்வுப் பகுதி, புயல் சின்னமாக 23-ந்தேதி வலுப்பெற்று, அதன் பின்னர் வடக்கு ஆந்திரா-வங்காளதேசம் இடையே கரையை கடக்க உள்ளது. பொதுவாக ஒரு புயல் கரையை கடந்தால் அடுத்த நிகழ்வு உருவாக ஒரு வார காலம் எடுக்கும்.

    அதன்படி, தமிழ்நாட்டில் இந்த புயலால் ஈரப்பதம் அனைத்தும் இழுக்கப்பட்டு, வறண்ட காற்றே இருக்கும். இதனால் 22-ந்தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் கோடை காலம் போல வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதிக்கு பிறகே வடகிழக்கு பருவமழைக்கான சூழல் தொடங்குகிறது.

    எனவே இடைப்பட்ட நாட்களில் மழைக்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவே. எனவே இந்த ஆண்டு மழை இல்லாமல் தீபாவளி பண்டிகை இருக்கும் என்பது வானிலை ஆய்வாளர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

    Next Story
    ×