search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?: ஸ்டாலினுக்கு, பழனிசாமி சவால்
    X

    நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?: ஸ்டாலினுக்கு, பழனிசாமி சவால்

    • கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை, இங்கு எந்த கட்சியினராலும் நுழைய முடியாது.
    • இரட்டை வேடம் போடும் கட்சிதான் தி.மு.க. அ.தி.மு.க. அப்படி அல்ல.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து கோவை கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒவ்வொரு இடமாக சென்று வருகிறேன். எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளமாக திரண்டு வருகிறார்கள். அதை பார்த்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால்தான் அவர் ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார்.

    கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை, இங்கு எந்த கட்சியினராலும் நுழைய முடியாது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அந்த மாவட்டத்தில் போட்டியிடும் நமது வேட்பாளர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அவருடைய வெற்றி அகில இந்திய அளவில் எதிரொலிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறாது என்று பேசி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். அவர் கண்ட கனவு வேறு. கூட்டணி பலம் அதிகமாக இருக்கிறது, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று நினைத்தார். அது பகல் கனவாக போனது. கூட்டணி அனைத்து கட்சிகளுக்கும் தேவைதான். ஆனால் அ.தி..மு.க.வுக்கு மக்கள் பலம் உள்ளது.

    நீங்கள் கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறீர்கள். ஆனால் அதி.மு.க. மக்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்கள் பலம்தான் வலிமையானது. அந்த மக்கள் பலத்தால்தான் வெற்றி பெற முடியும். அது எங்கள் பக்கம் இருக்கிறது. அ.திமு.க. உழைப்பாளிகள் அதிகமாக இருக்கும் கட்சி. நாங்கள் உழைப்பு, மக்களை நம்பி இருக்கிறோம். எனவே இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி நிச்சயம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டும். எங்கள் கட்சி தொண்டன் பேச ஆரம்பித்துவிட்டால் உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. அ.தி.மு.க.வில் அனைவருமே சமம். அனைவருக்கும் பொறுப்பும், உணர்வும், லட்சியமும் இருக்கிறது.

    அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை அறிவித்ததால் அதன் மூலம் மக்கள் ஏராளமான பயன் பெற்றனர். நீங்கள் பொறுப்பேற்று இந்த 3 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் போட்டோம் என்று மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள். நீங்கள் எந்த திட்டத்தையும் செய்யவில்லை. அதனால்தான் உங்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. அதி.மு.க.வை விமர்சனம் செய்கிறீர்கள்.

    அ.தி.மு.க. இருண்ட ஆட்சி என்று பேசி வருகிறீர்கள். நீங்கள் ஒரு பொதுக்கூட்டத்தை போடுங்கள், உங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டம் குறித்து நீங்கள் பேசுங்கள், எங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டம் குறித்து நானே நேரில் வந்து பேசுகிறேன். எந்த இடத்துக்கும் வந்து பேச நான் தயார். 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். வேண்டும் என்று திட்டமிட்டு அவதூறு பரப்பி பொய்யான குற்றத்தை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறீர்கள். தமிழக மக்கள் நன்றாக கவனித்து வருகிறார்கள். அ.தி.மு.க. மீது நீங்கள் கூறும் பொய் பிரசாரம் எடுபடாது.

    நாங்கள் பா.ஜனதாவை கண்டு பயப்படவில்லை. இந்தியாவில் உள்ள எந்த கட்சியை கண்டும் எங்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு மடியில் கனம் இல்லை. இதனால் யாரையும் கண்டு பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. தி.மு.க.தான் பா.ஜனதாவுடன் ரகசியமாக கூட்டணி வைத்து உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் கோ பேக் மோடி என போராட்டம் நடத்தினீர்கள். ஆளும்கட்சியான பிறகு வெல்கம் மோடி என்றீர்கள்.

    பிரதமர் மோடியை தமிழகத்துக்கு 6 முறை அழைத்து வந்து, நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உதவி செய்தீர்களே.

    இரட்டை வேடம் போடும் கட்சிதான் தி.மு.க. அ.தி.மு.க. அப்படி அல்ல. தமிழகத்துக்கு நலம் சார்ந்த பிரச்சனை என்றால் அதை எதிர்ப்போம். தமிழகத்துக்கு நன்மை தரும் திட்டம் என்றால் அதை வரவேற்போம். தற்போது நாங்கள் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டோம். நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்தது தி.மு.க.வுக்கு பிடிக்க வில்லை. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் அதைபற்றி பேசி வருகிறார்கள்.

    எங்கள் மீது குறை சொல்ல எதுவுமே இல்லை. இதனால்தான் எங்களை பற்றி மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறாக பேசி வருகிறார். தற்போது அவர் 23-வது புலிகேசி படத்தில் வடிவேலு வருவதுபோன்று தான் செய்து வருகிறார். எனவே அவருக்கு வெள்ளை குடை பிடித்த வேந்தர் என்று பட்டம் கொடுக்கலாம்.

    தற்போது கச்சத்தீவு குறித்த பா.ஜனதா கையில் எடுத்து பேசி வருகிறது. அந்த கச்சத்தீவு குறித்து பேச அ.தி.மு.க.வுக்குதான் தகுதி இருக்கிறது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததில் இருந்து அதை மீட்டெடுக்க அ.தி.மு.க. போராடி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.

    2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. உடனே பிரதமர் மோடிக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். ஆனால் கடந்த 10 ஆண்டு காலமாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தேர்தல் வந்துவிட்டதால் கிடப்பில் போடப்பட்ட கச்சத்தீவை கையில் எடுத்து உள்ளனர்.

    கச்சத்தீவு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருந்து வருகிறது. ஆனால் அந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. அப்படி பதில் மனு தாக்கல் செய்து, ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மறுபரிசீலனை செய்வோம் என்ற வாக்கியத்தை சேர்த்து மனு தாக்கல் செய்தால் தானாகவே கோர்ட்டு மூலம் அந்த கச்சத்தீவை நாம் பெற முடியும்.

    ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. மீனவர்களின் வாக்குகள் தேவை என்பதால் தற்போது அந்த பிரச்சனையை பா.ஜனதா கையில் எடுத்து பேசி வருகிறது. மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்களே அப்போது அவர்கள் எங்கே சென்றார்கள். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. கச்சத்தீவு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருவது தொடர்பாக ஏதாவது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணினாரோ?, இல்லையே.

    மத்தியில் ஆட்சி செய்த பா.ஜனதாவுக்கும், மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க.வுக்கும் மீனவ மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. மீனவ மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, கோர்ட்டு மூலம் கச்சத்தீவை மீட்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த தீவை மீட்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×