search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல் பணிகள் சூடு பிடித்தன: தி.மு.க. வேட்பாளர்களை விரைவில் அறிவிக்க திட்டம்
    X

    பாராளுமன்ற தேர்தல் பணிகள் சூடு பிடித்தன: தி.மு.க. வேட்பாளர்களை விரைவில் அறிவிக்க திட்டம்

    • நாளை முதல் நாளில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய கருத்து கேட்கப்படுகிறது.
    • வேட்பாளர் தேர்வு பட்டியல் குழுவில் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளதால் அவரது நம்பிக்கையை பெற்றவர்களுக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அனேகமாக ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தலை சந்திக்க அகில இந்திய அளவில் காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் சேர்ந்து பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி அடுத்த வாரம் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான 'இந்தியா கூட்டணி'யில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள்,

    ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்று உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் இந்த கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 குழுக்களை உருவாக்கி உள்ளார்.

    அதன்படி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா எம்.பி., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், ராஜேஸ்குமார் எம்.பி., எழிலரசன் எம்.எல்.ஏ. அப்துல்லா எம்.பி. எழிலன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

    தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இதன் தொடக்கமாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை கண்டறிந்து அதற்கேற்ப வேட்பாளர்களை தேர்வு செய்வது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அது மட்டுமின்றி தற்போது எம்.பி.யாக இருப்பவரின் செயல்பாடு எப்படி உள்ளது? அவருக்கே மீண்டும் சீட் கொடுக்கலாமா? அல்லது வேறு நபருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கலாமா? என்பது பற்றியும் அறிய முடிவு செய்யப்பட்டது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி நிலவரம் எவ்வாறு உள்ளது? எந்தெந்த தொகுதிகள் சாதகமாக இருக்கும் என்பது பற்றியும் எந்தெந்த தொகுதிகளில் பிரச்சனை உள்ளது என்பதையும் முதலில் கண்டறிய முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணைமேயர், மண்டலக்குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகரமன்ற தலைவர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவழைத்து தொகுதி நிலவரத்தை தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நாளை மதியம் 3 மணி முதல் ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை வரவழைத்து கருத்து கேட்டு வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    நாளை முதல் நாளில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய கருத்து கேட்கப்படுகிறது.

    அதன்பிறகு 27-ந்தேதி பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கருத்து கேட்கப்படுகிறது. இப்படி தொடர்ச்சியாக 5-ந்தேதி வரை கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வேட்பாளர்களை இறுதி செய்கிறார்கள்.

    அதன் பிறகு 40 தொகுதிகளுக்கும் யார்-யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்ற பட்டியலை தி.மு.க. தலைவர், முதலமு.க. ஸ்டாலின் கவனத்துக்கு இந்த குழு கொண்டு செல்லும். அதன் அடிப்படையில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள இன்னும் 2 மாத காலமே உள்ளதால் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேலம் மாநாட்டில் பேசும்போது பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியினர் போட்டியிட அதிக வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டிருந்தார்.

    இப்போது வேட்பாளர் தேர்வு பட்டியல் குழுவில் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளதால் அவரது நம்பிக்கையை பெற்றவர்களுக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூடியது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×